தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி என்கிற நடராஜ் நடித்துள்ள படம் ‘டிஎன் 2026’. கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி உள்ளிட்ட இன்னும் பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படம் அரசியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியானது. அதில் ஒரு வாகனத்தில் ஏறி கை உயர்த்தி நட்டி போராடுவது போலவும் அவரை சுற்றி அவரது ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்புவது போலவும் அமைந்திருந்தது. மேலும் அப்போராட்டக் கூட்டத்தில் ‘திரைப்படம் எப்போ…’, ‘சாதி மதம் இல்லயடி பாப்பா எங்க படத்துக்கு தேதிய தாப்பா’, ‘படத்தின் மீது பயமா’ போன்ற பதாகைகள் இடம் பெறறிருந்தது. இதை நிகழ்காலத்தில் ஒப்பிட்டு பார்க்கையில் ஒரு நடிகரின் படம் வெளியாகாத சூழலில் அதை எதிர்த்து போராடுவது போல் அமைந்திருந்தது. அதாவது விஜய்யின் ஜன நாயகன் படத்தை மறைமுகமாக சொல்வது போல் அமைந்திருந்தது.
இதையடுத்து இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அது விஜய்யையும் ஜன நாயகன் படத்தையும் அப்பட்டமாக சொல்லியுள்ளது போல் அமைந்துள்ளது. சினிமாவில் ஒரு உச்சத்தில் இருக்கும் நடிகர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி பின்பு அரசியலுக்கு நுழைந்து முதல்வராக போராடும் சூழலில் அவர் ஜெயித்தாரா இல்லையா என்பதை வைத்து உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த டீசரில் நட்டியின் கெட்டப் அப்படியே விஜய்யை பிரதிபலிப்பது போலவும் அவரது உடல் அசைவுகளும் விஜய் போலவும் அமைந்துள்ளது. மேலும் எம்ஜிஆர் தான் தனது ரோல் மாடல் என விஜய் கூறி வந்ததை குறிக்கும் வகையில், ‘எம்ஜிஆர் போல் தானே எங்க தலைவரும் இருக்கிறார்’ என்ற ரீதியில் ஒரு வசனம் இடம் பெறுகிறது. இதனிடையே நடிகர் அரசியலுக்கு வருவதை விமர்சிக்கும் வகையில், ‘சினிமாக்காரன் தமிநாட்டில் வாழ ஆசைப்படலாம், ஆள ஆசைப்படலாமா’, ‘கூத்தாட வந்தவனையெல்லாம் தலை மேல தூக்கி வச்சி கொண்டாடுறீங்க’ போன்ற வசனங்களும் இடம் பெறுகிறது.
விஜய் தனது கட்சியை 2024ஆம் ஆண்டு ஆரம்பித்த பிறகு அந்த வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட்டுவிட்டு நேரடியாக 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என குறிவைத்து செயல்படத் தொடங்கினார். மேலும் அவரது வருகை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் இதை பிரதிபலிக்கும் தலைப்பை வைத்து அவரை போன்றே அனைத்தும் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஆனால் இப்படம் முன்னதாகவே எடுக்கப்பட்டுவிட்டதாகவும் அதன் பிறகு தான் காட்சிகள் நிஜத்தில் நடந்தது என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.
