ரிஷி பஞ்சமி என்பது இந்து சமயத்தில் சப்தரிஷிகளை (ஏழு பெரும் முனிவர்கள்) போற்றி, அவர்களின் ஆசியைப் பெறுவதற்காக அனுசரிக்கப்படும் மிக முக்கியமான விரத நாளாகும்.பொதுவாக விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள், அதாவது ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியான் இன்று இந்த விரத நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் பிரபஞ்சத்தின் ஞானத்தை உலகுக்கு அளித்த ஏழு மகரிஷிகள் மற்றும் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தேவி ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
சப்தரிஷிகள் யார்?
1. கஷ்யபர்
2. அத்ரி
3. பரத்வாஜர்
4. விஸ்வாமித்ரர்
5. கௌதமர்
6. ஜமதக்னி
7. வசிஷ்டர் மற்றும் மாதா அருந்ததி
விரதத்தின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்:
1. பாவ விமோசனம்- தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகள், தீட்டுக்கள் மற்றும் பாவங்களுக்கான பிராயச்சித்தமாக இந்த விரதம் கருதப்படுகிறது.
2. பெண்களுக்கான சிறப்பு விரதம்- மாதவிடாய் காலங்களில் அறியாமல் ஏற்பட்ட தொடுதல் தீட்டுகள், சாஸ்திர மீறல்கள் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் தோஷங்களை நீக்க பெண்கள் இந்த விரதத்தை மிக பக்தியுடன் கடைப்பிடிக்கின்றனர்.
3. குடும்ப சுபிட்சம் – குடும்பத்தில் அமைதி, சந்ததி விருத்தி, நோயற்ற வாழ்வு மற்றும் மகரிஷிகளின் குருவருள் பரிபூரணமாகக் கிடைக்க இது வழி வகுக்கும்.
விரத முறை மற்றும் பூஜை சடங்குகள் :
இந்த நாளில் அதிகாலையில் எழுந்து புண்ணிய நதிகள், குளங்கள் அல்லது வீட்டில் நீராடும் போது உகந்த மூலிகைகள் (நாயுருவி இலை, தர்பை போன்றவை) பயன்படுத்தி நீராடுவது மரபு.பூஜையறையைத் தூய்மை செய்து, கோலமிட்டு, சப்தரிஷிகளையும் அருந்ததி தேவியையும் ஆவாகனம் செய்யும் விதமாக 8 வெற்றிலைகள் அல்லது அரிசி பரப்பிய தட்டில் 8 பாக்குகளை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
வழிபாடும் முறை:
– சந்தனம், குங்குமம், மலர்கள், துளசி, வில்வம் சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். மகரிஷிகளின் பெயர்களைக் கூறி தூப, தீப ஆராதனைகள் காட்டி வழிபட வேண்டும்.
– இந்நாளில் விரதம் இருப்பவர்கள் கலப்பையால் உழப்படாத தானியங்கள், பழங்கள், கிழங்கு வகைகள் மற்றும் எளிய காய்கறிகளை மட்டுமே உண்பது வழக்கம்.
– அரிசி சாதம், வெங்காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்ப்பர். சிலர் ஒரு வேளை மட்டும் எளிய சாத்விக உணவை ஏற்று விரதமிருப்பர்.
– பூஜையின் முடிவில் வேதம் ஓதும் அந்தணர்கள் அல்லது பெரியவர்களுக்கு வஸ்திரம், பழங்கள், தட்சணை தானமாக வழங்குவது சிறந்தது.
புராணப் பின்னணி:
பவிஷ்ய புராணத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தர்மருக்கு (யுதிஷ்டிரர்) ரிஷி பஞ்சமியின் பெருமையை விளக்கியுள்ளார். முற்காலத்தில் விதர்ப்ப நாட்டில் வாழ்ந்த சுமித்ரா என்ற பெண்மணி, மாதவிடாய் கால தீட்டு நெறிகளை முறையாகக் கடைப்பிடிக்காததால் அடுத்த பிறவியில் பெரும் தோஷங்களைச் சந்திக்க நேரிட்டது. அவரது மகள் ரிஷி பஞ்சமி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து, அந்தப் புண்ணிய பலனைத் தனது தாய்க்குத் தாரைவார்த்துக் கொடுத்ததன் மூலம் அக்குடும்பம் தோஷங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடைந்தது என்பது புராண வரலாறு.
விரத பலன்கள் :
- மனத் தூய்மையும், ஆன்ம பலமும் பெருகும்.
- தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவ வினைகள் அகலும்.
- பெண்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, குடும்பத்தில் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும்.
