தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் அவிநாசியில் வேட்புமனுவே எடுக்காமல் வந்த வேட்பாளரால் குழப்பம் ஏற்பட்டது. அவிநாசி (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக வேட்பாளராக கமலி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனாவிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது வேட்புமனு இல்லாமல் வெறும் கையோடு வந்துள்ளார்.
முன்னதாக கமலியுடன் வந்த அவிநாசி மத்திய ஒன்றியச் செயலாளர் சாபி உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ய ஆயத்தமாகினர். தேர்தல் நடத்தும் அலுவலர் இருக்கும் இடத்திற்கு வந்தபின் தான் தெரிந்துள்ளது வேட்பாளர் கமலி வேட்மனுவை எடுக்காமலே வந்தது.
வேட்புமனு இல்லாமல் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் இருக்கக் கூடாது என விதி இருப்பதால் கமலி வெளியேற்றப்பட்டார். உடனே உடன் வந்த நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க அதன்பின்னர் அக்கட்சியின் வழக்கறிஞர் நிவேதன், தவெகே வேட்பாளர் கமலின் பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுவை சுமார் ஒரு மணி நேரம் கழித்துக் கொண்டு வந்தார். இதனால் ஒரு மணி நேரம் வேட்புமனு தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டது.
