குருட்டு அதிர்ஷ்டத்தில் ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.. மக்கள் முடிவுரை எழுதுவார்கள்: தவெகவை கடுமையாக அட்டாக் செய்த டிடிவி தினகரன் – ttv dhinakaran stating that the people will write final chapter of tvk govt

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தவெக அரசினை நோக்கி தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தவெக அரசினை சரமாரியாக விமர்சித்து பேசியுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது. குறிப்பாக தமிழக வெற்றி கழகம் குருட்டு அதிர்ஷ்டத்தில் ஆட்சிக்கு வந்துள்ளதாக கடுமையாக தாக்கி டிடிவி தினகரன் பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று வருகிறது.

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் அவருடைய சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அண்ணாவிற்கு மரியாதை செலுத்த வருகை தந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக ஆட்சி மீது சரமாரி விமர்சனங்களை முன்வைத்தார்.

அதாவது அவரிடம் தவெக ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் ஆகியுள்ளது. இந்த ஆட்சிக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய மதிப்பெண் என்ன? இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டு இருக்கு என்ற கேள்வியை செய்தியாளர் ஒருவர் முன்வைத்தார். அதற்கு முதல்வர் விஜய் முதல் அங்கு இருக்கிற அனைவரும் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களே எதிர்பாராத விதமாக குருட்டு அதிர்ஷ்டத்தில் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அதனால் அவர்களுடைய செயல்பாட்டினை தமிழ்நாடு முழுவதும் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் கூட ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம் என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆட்சியாளர்கள் தலை கால் புரியாமல் ஆடுவதை நிறுத்தி விட்டு, சரியான முறையில் ஆட்சி செய்தால் அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு முடிவுரை எழுதுவார்கள் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு கூரையில் நீங்க ஏறலை. உங்களை திமுகவின் தோழமை கட்சிகளும், அதிமுக மற்றும் அமமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து தான் உங்களை கூரையில் ஏற்றி இருக்கிறார்கள்.

முதலில் கூரை ஏறி கோழி பிடிக்க முயற்சி செய்யுங்க. அதுக்கப்புறம் வைகுண்டம் போறதை பற்றி யோசிக்கலாம் எனவும் விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற தவெகவினரின் கருத்து குறித்து கிண்டல் அடித்துள்ளார் டிடிவி தினகரன். மேலும் புதிய தலைமை செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைக்க முடியவில்லை. அதற்கான இட வசதி அங்கு இல்லை. அதோடு கடற்கரை ஓரத்தில் இருப்பதால் ஒன்றிய அரசின் அனுமதியும் வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Source link