“உண்மையை சொல்ல வேண்டும்” – ‘நீளிரா’ படம் பார்த்த பின் ஆசையை வெளிப்படுத்திய சுதா கொங்கரா

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீளிரா’. இப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே இசையமைத்திருக்கும் இப்படம் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாகக் கொண்டு சர்வைவல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. 

இப்படம் இன்று (03-04-26) முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.  முன்னதாக, படத்தைப் பார்த்த விமர்சகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் இப்படத்தைக் கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் வெற்றிமாறன், ராஜூ முருகன், வசந்த பாலன் உள்ளிட்டோர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தை பாராட்டியிருந்தனர். தொடர்ந்து சூர்யா படத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா, இப்படத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “ஒரு ஈழத் தமிழர் ஈழத்தை பற்றி படம் எடுத்ததை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன். அவர்கள் பார்வையில் எவ்வளவு வலியுடன் பேசுகிறார்கள் என்பது இப்படத்தில் தெரிந்தது. அது த்ரில்லர் மாதிரி சென்றது. இவங்க ஜெயிப்பாங்களா அவங்க ஜெயிப்பாங்களா என்ற ஃபார்மெட்டை வைத்து அழகான ஒரு வரலாற்றை இயக்குநர் சொல்லியிருக்கிறார். 

அனைத்து நடிகர்களின் நடிப்புமே பிரமாதம். உலக அளவில் இருக்கும் நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக படத்தில் வரும் அம்மா கேரக்டர், ரொம்ப சிறப்பு. ஒரு அம்மாவாக குடும்பத்துக்கு என்ன பண்ண வேண்டும், ஒரு போராளியுடைய மனைவியாக என்ன பண்ண வேண்டும் என நடித்திருந்தது அற்புதமாக இருந்தது. இது போன்ற கதைகள் சொல்ல வேண்டும். இன்னமும் சொல்லப்பட வேண்டும். அதை உண்மையாக சொல்ல வேண்டுமென்பது என் ஆசை” என்றார். 



Source link