தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக, ராமதாஸ் – சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, விடுமுறை நாட்கள் நீங்கலாக வேட்புமனு தாக்கல் செய்ய சனி (04-04-26), திங்கள் (06-04-26) என இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அனைத்து கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளா நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும், வித்தியாசமான முறையிலும் மக்களை கவரும் வகையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டையை இஸ்திரி செய்து ஐஜேகே வேட்பாளர் ஒருவர் வாக்கு சேகரித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுக – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பல்லாவரம், குன்னம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்லாவரம் தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் வெங்கடேசன் என்பவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெங்கடேசன் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றார்.
அந்த வகையில், பல்லாவரம் தொகுதியின் கீழ்கட்டளை கலைவாணி தெருவில் உள்ள சலவை தொழிலாளர் கடைக்கு சென்ற வேட்பாளர் வெங்கடேசன், அங்கிருந்து சட்டைக்கு இஸ்திரி போட்டுள்ளார். அதனை தொடர்ந்து சலவை தொழிலாளர்களுடன் இணக்கமாக பழகி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
