சாலையோர ஹோட்டலில் புகுந்த சொகுசு பேருந்து- மூவர் படு@காயம்

மதுரையில் சாலையோர ஓட்டலில் சொகுசு பேருந்து புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை அடுத்துள்ள கொட்டாம்பட்டியில் பள்ளப்பட்டி நான்கு வழிச்சாலையின் அருகே சாலையோர ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு அந்த உணவகத்தில் தேநீர் மற்றும் உணவு சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று அந்த சாலையில் வந்தபோது திடீரென சொகுசு பேருந்தின் டயர் வெடித்தது. இதனால் அங்கு  பயங்கர சத்தம் ஏற்பட்டது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னார் லாரி மற்றும் சுற்றுலா வேன் மீது மோதியதோடு  உணவகத்தில் புகுந்தது.

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி சாலை ஓரத்திலேயே கவிழ்ந்தது.  இந்த பயங்கர விபத்தில் சொகுசு பேருந்தின் ஓட்டுநர் ஜெயராஜ் மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக மதுரை-திருச்சி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Source link