தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாமலேயே இருந்தது. இந்த நிலையில், இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று (03-04-26) பா.ஜ.க வெளியிட்ட நிலையில், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு சீட் வழங்கப்படவில்லை.
அதிமுக – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அதாவது அதிமுக, பா.ஜ.க சார்பாக தலா 1 தொகுதிகல் ஒதுக்கப்பட்டதாகவும், இரட்டை இலை மற்றும் தாமரை சின்னங்களில் தலா 1 தொகுதியில் போட்டியிடுவோம் என்று தெரிவித்திருந்தார். அதன்படி அதிமுக சார்பாக புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுவார் என்று புதிய நீதி கட்சி அறிவித்தது.
பா.ஜ.க சார்பில் புதிய நீதி கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த சூழலில், அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க இன்று வெளியிட்டது. அதில் திருமாறனின் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட பா.ஜ.க 1 சீட் வழங்கியுள்ளது. ஆனால், புதிய நீதி கட்சிக்கு பா.ஜ.க சீட் வழங்கவில்லை. இதனால், அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஏ.சி.சண்முகம், “நான் கேட்ட தொகுதியை பா.ஜ.க வழங்காமல், வலுவான போட்டி இருக்கும் தொகுதியை கொடுத்தார்கள். அதனால் நானே அந்த தொகுதி வேண்டாம் என்று கூறி அதை பா.ஜ.கவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேன். நாங்கள் கேட்ட தொகுதியை பா.ஜ.க கொடுக்காததால் நானே விட்டுக் கொடுத்துவிட்டேன்” என்று கூறினார்.
