புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியை 20 வருடங்களாக கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுத்தோம், இந்த முறையாவது உதயசூரியன் சின்னத்தை எதிர்பார்க்கிறோம் என்று திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி தலைமை வரை கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த தேர்தலிலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அறந்தாங்கி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் அப்செட்டாகிவிட்டனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் அறந்தாங்கி தொகுதியில் ராம சந்திரன் என்பவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே சமயம், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டு மகளிரணி கவிதா ஸ்ரீகாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் களப்பணியில் உள்ளார். தவெக வேட்பாளராக தொகுதி மாறி வந்த முகமது பர்வேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் தி.மு.கவில் அதிருப்தியில் உள்ளவர்களை முகமது பர்வேஷ் வளைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் காங்கிரஸ் மீது எதிர்ப்பாக உள்ள மாஜி சட்டமன்ற உறுப்பினரும், ஆவுடையார்கோயில் திமுக ஒன்றிய செயலாளருமான உதயம் சண்முகம் மகன் முன்னாள் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த சரண் (எ) சிவசங்கர், ‘எனக்கு காங்கிரஸ் பிடிக்கவில்லை, பாஜக கொள்கையும் பிடிக்காது. அதனால் திமுககாரன் என்ற அடையாளத்தோடு தவெக வேட்பாளருக்கு தேர்தல் பணி செய்யப் போகிறேன். அதற்காக திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையவில்லை. தேர்தல் முடியும் வரை தேர்தல் பணி மட்டும் செய்வேன்’ என்று கூறியவர், இன்று தவெக வேட்பாளர் முகமது பர்வேஸ் உடன் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இதனால் திமுக – காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சரண் வெளிப்படையாக தவெகவுக்கு வேலை செய்கிறார், மற்ற பலர் மறைமுகமாக பாஜக, தவெகவுக்கு வேலை செய்றாங்க என்கின்றனர் உடன் பிறப்புகள்.
