திருநெல்வேலி: ” முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேச அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்க்கு எந்த தகுதியும், அருகதையும் கிடையாது,” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பாளையங்கோட்டையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக முதுகில் ஏறி அரசியல் பண்பாட்டு படையெடுப்பு நடத்துகிறது பாஜ. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் மாநிலம் முடக்கப்பட்டு பாதாளத்திற்கு தள்ளப்பட்டது.
ஜெயலலிதா வாழ்ந்த கோடநாட்டில் கொலை, கொள்ளை, சாத்தான்குளம் வழக்கு, நீட் தேர்வு தற்கொலைகள், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக அமைதியாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதற்கு மேல் சிறுபான்மை விரோத சட்டங்களை ஆதரித்து நீட்டிய இடங்களில் கையெழுத்து போட்டது என தமிழகத்தின் மாநில உரிமை, நிதி உரிமை என பிளாஷ்பேக்கை நினைத்தால் மக்கள் பீதி அடைவார்கள்.
அப்படிப்பட்ட கேவலமான ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டு புதிய விடியல் தந்து நாட்டில் முதன்மையான மாநிலத்தை உருவாக்கி உள்ளோம். இந்தியாவிற்கே வழிநடத்தும் மாநிலத்தை உருவாக்கி உள்ளோம். இந்தியாவே, தமிழகத்தைதிரும்பி பார்க்கும் ஆட்சியை வழங்கியிருக்கிறோம்.
நம்ப மாட்டார்கள்
ஆனால், இபிஎஸ் ஓட்டு கேட்டு வருகிறார். சுயசிந்தனை இல்லாமல், தமிழகத்தை நாசப்படுத்தியவர், துரோகத்தின் மொத்த உருவமான அவர், மக்களை புறக்கணித்ததை புரிந்து கொண்டு, நமது திட்டங்களை காப்பியடித்து புதிதாக ஸ்டிக்கர் ஒட்டி வந்து கொண்டுள்ளார்.
துரோகத்தின் மொத்த உருவகமான இபிஎஸ் ஐ மக்கள் நம்ப மாட்டார்கள்.கடந்த தேர்தலில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலில் செயல்படுத்த முடியாது எனக்கூறினார். மக்களிடம் வரவேற்பை புரிந்து கொண்டு அதிக தொகை வழங்குவோம் என கடந்த தேர்தலில் கூறினார். ஆனால், அவரை நம்ப மாட்டோம் எனக்கூறி மக்கள் உதயசூரியனுக்கு ஓட்டுப்போட்டீர்கள்.
இலவச திட்டஙகளை கொச்சைப்படுத்தி பேசினார். இதனை முடக்குவோம் என்றால் மக்கள் விரட்டியடிப்பார்கள் என தெரிந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மகளிர் குல விளக்கு என ஸ்டிக்கர் ஒட்டிவருகிறார். இதனை பார்த்த ஸ்டாலின் சொன்னதை செய்வார். சொல்லாததையும் செய்வார் என புரிந்து கொண்டனர்.
அதேபோல், இபிஎஸ் சொன்னதை செய்ய மாட்டார். சொந்தமாகவும் செய்ய மாட்டார் என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். 11வது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.
தேர்தல் களத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார். தேர்தல் வாக்குறுதிகளில் திமுக சிக்சர் அடித்துள்ளது.சொன்னதை மறக்கவும் மாட்டேன். மறுக்கவும் மாட்டேன்.
டபுள் இன்ஜின், டப்பா இன்ஜின் என அமித் ஷா ஆட்டிவைக்கும் அதிமுக, மக்களுக்கு சொன்னது என்ன, செய்தது என்ன? 2014ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என சொல்லி மக்களை வங்கி, ஏடிஎம் வாசலில் நிற்க வைத்தார். எத்தனை பேர் இறந்தனர்.
இபிஎஸ் வேலை
தமிழகத்திற்கு ஒன்றுமே இல்லை. இதுதான் மோடியின் மாடல். பாஜ என்று சொன்னால் விரட்டி அடிக்கிறார்களே என்ன பண்ணலாம் என பார்த்தனர். துரோகம் செய்ய தயாராக இருப்பார்களா என பார்த்தனர். அப்படி கிடைத்தவர் தான் துரோகத்தின் மொத்த உருவகமான இபிஎஸ்.
பாஜவுக்கு துணைபோவது சமரசம் செய்வது, ஜால்ரா போடுவது, சிகப்பு கம்பளம் விரிப்பது, அதிமுகவை அமித்ஷாவிடம் தாரைவார்க்கிறது தான் இபிஎஸ்–ன் வேலை.
அப்படிப்பட்டவர் இபிஎஸ், கருணாநிதியை நான் வீட்டு சிறையில் வைத்தேன் என நாக்கில் நரம்பு இல்லாமல் பேசி உள்ளார். தோல்வி பயத்தில் எல்லை மீற பேசி துவங்கி உள்ளீர்கள். முதல்வர் என்ற முறையில் என்னை விமர்சிக்க எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் உரிமை உள்ளது. மக்கள் எடை போட்டுப்பார்த்து முடிவு செய்வார்கள். உங்களுக்கு பதிலளிப்பார்கள்.
உரிமை இல்லை
கருணாநிதி குறித்து பேச உரிமையும் கிடையாது. தகுதியும் கிடையாது. முதுமையில் ஓய்வெடுத்தார். நினைவாற்றல் இழந்த போது உங்களுக்கு யாரை பிடிக்கும் என டாக்டர் கேட்ட போது அண்ணாதுரை என்று சொன்னார். முடியாத நிலையிலும் திமுக தலைமை அலுவலகம் செல்ல நினைத்தார். அவரை யாரும் சிறை வைக்க முடியாது. அவரது இதய சிறையில் தான், நான் உட்பட அனைவரும் குடியிருந்தோம் கருணாநிதி பெயர் சொல்ல உரிமை கிடையாது. தகுதியும் கிடையாது.
ஆட்சியை பிடிக்க முடியாது
ஐந்து முறை முதல்வராக இருந்து நீண்ட ஆட்சி செய்தவர் கருணாநிதி. அண்ணாதுரை சமாதிக்கு அருகே கருணாநிதி சமாதி அமைக்க உங்களிடம் சோகத்திலும் படியேறி வந்து கேட்டேன் மெரினாவில் இடம் வழங்க இபிஎஸ் மறுத்துவீட்டீர்கள். என் தந்தைக்கு கடற்கரையில் இடம் கேட்டு வீடு தேடி வந்த போது இரக்கம் இல்லாமல் இருந்தவர் நீங்கள் தானே.அப்படிப்பட்ட உங்களுக்கு கருணாநிதி குறித்து பேச அருகதை கிடையாது.
உங்களை நம்பி ஆட்சியை கொடுத்த சசிகலா காலை வாரி விட்டவர் நீங்கள் தானே ! ஓபிஎஸ், தினகரன் முதுகில் குத்தியவர் .உங்களால் எப்போதும் ஆட்சியை பிடிக்க முடியாது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
சோதனை
தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு காரில் சென்றார். அப்போது வாகைக்குளம் பகுதியில் அவரது காரை நிறுத்திய தேர்தல் பறக்கும்படையினர் சோதனை செய்தனர்.
