மும்பை: ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பையின் மேயர் பதவிக்கு, பா.ஜ., கவுன்சிலர் ரிது தாவ்டே

மும்பை: ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பையின் மேயர் பதவிக்கு, பா.ஜ., கவுன்சிலர் ரிது தாவ்டே போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியான சிவசேனாவின் சஞ்சய் காடி துணை மேயராகிறார். இதன் மூலம், மும்பை மாநகராட்சியை, 25 ஆண்டுகளாக ஆண்ட தாக்கரே குடும்பத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., – சிவசேனா – தேசியவாத காங்., அடங்கிய, ‘மஹாயுதி’ கூட்டணி ஆட்சி நடக்கிறது.

ஒப்பந்தம்

இங்குள்ள ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட, 29 மாநகராட்சிகளுக்கு கடந்த மாதம் 15ல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

இதில், மும்பை உட்பட பெரும்பாலான மாநகராட்சிகளை ஆளும் மஹாயுதி கூட்டணி கைப்பற்றியது. தாக்கரே குடும்பத்தின் கோட்டையாக, 25 ஆண்டுகளாக இருந்த மும்பையை கைப்பற்றி பா.ஜ., கூட்டணி சாதித்தது.

மொத்தம், 227 வார்டுகள் உடைய மும்பை மாநகராட்சியில் நடந்த தேர்தலில், பா.ஜ., 89; துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா – 29 இடங்களை கைப்பற்றின.

கடந்த 1997 முதல், 25 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை ஆண்ட உத்தவ் தாக்கரேயின் சிவசே னா, 65 இடங்களையும் , காங்., 25 இடங்களையும் வென்றன.

மேயர் பதவியை கைப்பற்ற, பெரும்பான்மைக்கு 114 தேவை என்ற நிலையில், மஹாயுதி கூட்டணிக்கு, 118 இடங்கள் கிடைத்தன.

மேயர் பதவி தொடர்பாக பா.ஜ., – சிவசேனா இடையே கடந்த சில நாட்களாக பல கட்ட பேச்சுகள் நடந்தன. இதில், மேயர் பதவி பா.ஜ.,வுக்கும், துணை மேயர் பதவி சிவசேனாவுக்கும் ஒதுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மும்பை மேயர் தேர்தல், வரும் 11ல் நடக்கவுள் ள நிலையில், காட்கோபர் கிழக்கு வார்டு பா.ஜ., கவுன்சிலர் ரிது தாவ்டே அ ப்பதவிக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சிவசேனா கவுன்சிலர் சஞ்சய் காடி துணை மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். பெரும்பான்மை உள்ளதால், இருவரும் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இதன் மூலம், மும்பை மாநகராட்சியின் முதல் பா.ஜ., மேயர் என்ற பெருமையை ரிது தாவ்டே பெற உள்ளார்.

சுழற்சி முறை

துணை மேயர் பதவியை பகிர்ந்தளிக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. அதன்படி, துணை மேயராக பதவியேற்கும் சஞ்சய் காடி, 15 மாதங்கள் மட்டுமே அப்பதவியில் தொடர்வார். பின், அக்கட்சியைச் சேர்ந்த மற்ற கவுன்சிலர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படும்.

கடந்த 2012-ல் பா.ஜ.,வில் இணைந்த ரிது தாவ்டே, இரு முறை கவுன்சிலராக பதவி வகித்துள்ளார்; மாநகராட்சி கல்விக்குழுத் தலைவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இவர் ஒரு மராத்தியர் மற்றும் ஹிந்து என்பதால், ‘மும்பையின் மேயர் ஒரு மராத்தியராகவும், ஹிந்துவாகவும் இருப்பார்’ என்ற பா.ஜ.,வின் தேர்தல் வாக்குறுதியும் இதன் மூலம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Source link