பல்லடம் : ”நீங்கள் சரியான தலைவனை தேர்வு செய்து, நாட்டை கொடுத்திருந்தால், நான் எதற்காக, முச்சந்தியில் வந்து உங்கள் முன்னால் நிற்கிறேன்,” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் காங்கேயம் தொகுதிகளில், சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது: இரு திராவிட கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருகின்றன. நம்மிடம் இருந்து எடுத்து, நமக்கே திருப்பித் தருவதற்கு பெயர் இலவசமா? கலைஞர் உரிமைத்தொகை என்பது கருணாநிதியின் பணமா? உங்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் ஏமாந்து வருகிறீர்கள்.
என்றைக்கு நீங்கள் எல்லாரும் சிந்தித்து செயல்படுகிறீர்களோ, அன்றுடன் என் வேலை முற்றுப்பெறும். நீங்கள் சரியான தலைவனை தேர்வு செய்து, இந்த நாட்டை கொடுத்திருந்தால், நான் எதற்காக முச்சந்தியில் வந்து உங்கள் முன்னால் நிற்கிறேன். அதிகாரம் கையில் இருப்பதால், அரசு பணத்தை எடுத்து, ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். விவசாயி விளை பொருட்களை சேமித்து வைக்க கிடங்கு இல்லை; சாராயத்தை சேமித்து வைக்க கிடங்கு வைத்திருக்கிறது இந்த அரசு.
நல்லவர்களை சாகடித்து விட்டு, நடிகனைத் தேடும் கூட்டம் மாற வேண்டும். தேர்தலில், 30 கோடி ரூபாய் முதலீடு செய்து எம்.எல்.ஏ.,வாக வருபவர்கள், உங்களுக்கு சேவை செய்வதற்கு, என்ன கடவுளா? எனவே, தயவு செய்து சிந்தியுங்கள். தமிழகத்தை ஆண்ட இரண்டு கட்சிகளின் ஆட்சியும், சாதி, மதம், சாராயம், பணம் என்ற நான்கு துாண்களுக்குள் தான் இருக்கும். உங்கள் ஓட்டை எங்களுக்கு தாருங்கள். கல்வி, மருத்துவம், தண்ணீர் இலவசமாக நாங்கள் தருகிறோம். தேர்தலில் பணம் விளையாடினால், ஜனநாயகம் செத்து போகும. இவ்வாறு அவர் பேசினார்.
