தங்கம் கொள்ளை வழக்கில் சிக்கிய தந்திரியை பதவி நீக்க தீர்மானம் தேவசம்போர்டு அறிவிப்பு

திருவனந்தபுரம்: ”சபரிமலை தங்கம் கொள்ளை போன வழக்கில் சிக்கிய தந்திரி ராஜீவரருவை பதவியில் இருந்து நீக்குவது பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும்,” என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ஜெயகுமார் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

சபரிமலையில் அடுத்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் அடிப்படையான பல மாற்றங்கள் ஏற்படும். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்காக மட்டும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தனி பட்ஜெட் தயாரிக்கும். பம்பையில் பக்தர்கள் தங்குவதற்காக கட்டடங்கள் கட்டப்படும்.

சபரிமலையில் தந்திரிகள் ஒவ்வொரு சீசனிலும் மாறி மாறி வருவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கம் கொள்ளை போன வழக்கில் சிக்கிய தந்திரி ராஜீவரருவை பதவியில் இருந்து நீக்குவது பற்றி முடிவு எடுக்கப்படும். அதில் எவ்வித சங்கடமும் இல்லை.

சன்னிதானத்தில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும். அரை மணி நேரத்துக்கு இடைவெளி விட்டு மட்டுமே அறிவிப்புகள் வெளியிடப்படும்.

கடந்த சீசனில், 483 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. எனினும் எவ்வளவு செலவு ஏற்பட்டது என்பது பற்றி இன்னும் கணக்கிடப்படவில்லை.

இனி தானாக வந்து சபரிமலையில் ஸ்பான்சர் செய்வதை ஏற்க முடியாது. தேவஸ்வம் போர்டு முடிவு செய்து ஸ்பான்சர்களை அழைப்போம்.

சபரிமலையில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும். இதற்காக கோவில் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

சபரிமலையில் தடையை மீறி சினிமா படப்பிடிப்பு நடந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link