புவனேஸ்வர்: ஈரான் போரின் தாக்கத்தால் சமையல் எரிவாயு வினியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சமாளிக்க, பி.என்.ஜி., எனப்படும் குழாய் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்க ஒடிஷா அரசு மூன்று மாதங்கள் கெடு விதித்துள்ளது.
நம் நாட்டில் எல்.பி.ஜி., எனப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலப்பொருள் கச்சா எண்ணெய்.
தற்போது மேற்காசிய பிராந்தியத்தில் கச்சா எண்ணெய் வரும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி வைத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு கப்பல்கள் வரத்து குறைந்துள்ளன.
இதற்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை சில நிறுவனங்கள் குழாய் மூலம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்குகின்றன. இதற்கான மூலப்பொருள் மீத்தேன். இவற்றுக்கான வெளிநாட்டு சார்பு, எல்.பி.ஜி.,யுடன் ஒப்பிடுகையில் குறைவு.
எனவே உட்கட்டமைப்பு சாத்தியம் உள்ள பகுதிகளில் பி.என்.ஜி.,க்கு மாற மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒடிஷா அரசு பெரிய நகரங்களில் மூன்று மாதங்களுக்குள் பி.என்.ஜி., வினியோகத்தை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல் கட்டமாக புவனேஸ்வர், கட்டாக், சம்பல்பூர், பெர்ஹாம்பூர், புரி ஆகிய முக்கிய நகரங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
புவனேஸ்வரில் 1.25 லட்சம் வீடுகளுக்கு பி.என்.ஜி., இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 19,000 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
முக்கிய நகரங்களில் போர் கால அடிப்படையில் குழாய் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த நகர்புற மேம்பாட்டு துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். பி.என்.ஜி., இணைப்பு பெறும் வீடுகளுக்கு, எல்.பி.ஐ., இணைப்பு நிறுத்தப்படும்.
