பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு செய்தால் வட மாநிலங்களின் வலிமை கூடும்: சிதம்பரம்

காரைக்குடி : “பா.ஜ., ஆட்சியோ, பா.ஜ., பங்கேற்கும் ஆட்சியோ வந்தால், ஆதிக்க சக்தியின் ஆட்சி தமிழகத்துக்குள் வந்து விடும்,” என சிதம்பரம் பேசினார்.

காரைக்குடியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில், காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பங்கேற்று பேசியதாவது: இந்த தேர்தலில், முன் வரிசையில் இருந்த அ.தி.மு.க., பின் வரிசைக்கு சென்று விட்டது; பா.ஜ., முன் வரிசைக்கு வந்து விட்டது. பல மாநிலங்களில், ‘பேப்பர் கப்’ போல, ‘யூஸ் அண்ட் துரோ’வாக கட்சிகளை பா.ஜ., பயன்படுத்துகிறது. ஹரியானா, அடுத்து ஒடிசா, அண்மையில் பீஹார் என நடந்ததை, அ.தி.மு.க., அறிய வேண்டும்.

தமிழக மக்கள் சனாதனத்தை ஏற்பதில்லை. தமிழ் கலாசாரத்திற்கும் அந்நிய கலாசாரத்திற்குமான மோதல் இந்த தேர்தல். ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும், பா.ஜ., நுழைந்த நாடும் உருப்படாது. வட மாநிலங்களில், சமுதாய இழிவு அதிகமாக உள்ளது. அங்கு ஆதிக்க சக்திகள் பா.ஜ.,வின் மடியில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் பா.ஜ., ஆட்சியோ, பா.ஜ., பங்கேற்கும் ஆட்சியோ வந்தால், ஆதிக்க சக்தியின் ஆட்சி தமிழகத்திற்குள் வந்துவிடும். பார்லிமென்டில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவால், வட மாநிலங்களின் வலிமை கூடி, தென் மாநிலங்களின் வலிமை குறைந்துவிடும். இதுகுறித்து அ.தி.மு.க., எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Source link