தோனி இல்லாமல் சேப்பாக்கத்தின் டிக்கெட் சேல்ஸே கொஞ்சம் டல் அடித்துவிட்டது போல. நேற்று இரவு வரைக்கும் ஆன்லைனில் கடையை விரித்து டிக்கெட் விற்றிருக்கிறார்கள். இந்தத் தகவலை கேட்ட உடனேயே ஒரு மன நிம்மதி. பேரானந்தம். ‘தோனி…தோனின்னு அந்த ஆள காமிச்சே ப்ளாக்ல எவ்வளவு ரேட்டுக்கு டிக்கெட் வித்திருப்பீங்க. இப்போ வித்து காமிங்க சார்…’ பெரும்பாலான சிஎஸ்கே ரசிகர்களின் மனக்குமுறல் இது.
முதல்வன் படத்தில் புகார் பெட்டியில் பூ விழுவதைப் போல முதல் முதலாக ப்ளாக்கில் ஆயிரம் ரூபாய் டிக்கெட்டை பத்தாயிரம் கொடுத்து வாங்காமல் நியாமான ரேட்டுக்கு டிக்கெட் வாங்கி வந்திருந்தனர் மஞ்சள் படையினர். அந்த சந்தோசம்தானோ என்னவோ…டாஸில் ருத்துராஜ் பேச வரும்போது அத்தனை ஆர்ப்பரிப்பு. இயான் பிஷப் பேசியது ருத்துவுக்கு கேட்காமல் போக, இருவரும் மைக் கவர் வாயில் சொருகமளவுக்கு நெருக்கமாக நின்று பேசி முடித்தனர்.
டாஸில் சென்னை அணியின் ஓப்பனிங் கூட்டணி வெற்றிக்கு எவ்வளவு முக்கியமென ருத்துராஜ் பாட்டாகவே படித்திருந்தார். எல்லாவற்றையும் பெவிலியனிலிருந்து கதை கதையாக கேட்டு கொண்டிருந்த சாம்சன் கடைசியில் ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்…’ மோடில் வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறியது சேட்டன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த ரணகளத்திலும் தோனி ரசிகர்களுக்கு ஒரு குதூகலம். சாம்சன் 7 பந்துகளில் 7 ரன்களை எடுத்து பார்ட்லெட்டின் பந்தில் ஆட்டமிழந்திருந்தார். மேட்சுக்கு மேட்ச் ஒரு ‘Thala For a Reason’ மொமண்ட் சிக்கிவிடுகிறதே. ‘உன்னை அடுத்த தோனி…அடுத்த கேப்டன்னு கனவு கண்டு வச்சா…தக்காளி உன்னையை அடுத்த சீசனே ரிலீஸ் பண்ண வேண்டி வரும் போலயே’ என்கிற டைப்பில் பெவிலியனில் மைக் ஹஸ்ஸி சாம்சனை லுக் விட்டுக் கொண்டிருந்தார்.

கொஞ்சம் நகருங்க சார்…’ என இருவரையும் நகர்த்தி விட்டு கடைக்குட்டியான ஆயுஸ் மாத்ரே நம்பர் 3 இல் வந்தார். மைதானத்துக்குள் மின்னல் இறங்கியதைப் போல இருந்தது. ‘ஒரே ஒருத்தன் எல்லாத்தையும் மாத்திட்டான்…’ என மாஸ் ஹீரோ படங்களுக்கு கொடுக்கும் அத்தனை பில்டப்புகளும் மாத்ரேவுக்கு பொருந்திப் போனது. ‘நீ பீல்டரை எங்க வேணா நிறுத்திக்கோ சித்தப்பு…’ என ஸ்ரேயாஸின் பீல்டிங் மாற்றங்கள் பௌலிங் ரொட்டேஷன் என எதையும் சட்டை செய்யாமல் அடிதடி காட்டினார். டீப் ஸ்கொயரும் டீம் மிட் விக்கெட்டையும் வைத்துக் கொண்டு ஷார்ட் பிட்ச் வீசினால் சரியாக அந்த பீல்டர்களின் தலைக்கு மேலேயே சிக்சர்களை பறக்கவிட்டார். ஸ்ரேயாஸ் லாங் ஆபில் நின்றார். அவரின் தலைக்கு மேலேயே இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார்.
ஸ்ரேயாஸூக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அத்தனை பதற்றம். இன்னொரு பக்கம் BMW காருக்கு முன்னால் பிய்ந்த டயரை வைத்துக் கொண்டு வழியை மறித்து உருட்டிக் கொண்டே இருந்தார் ருத்துராஜ். ஒரு ப்ளேயர் அடித்து ஆடினால், இன்னொரு ப்ளேயர் கம்பெனி கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் பழைய பார்முலா. அதை இப்போதும் கடைப்பிடித்து கடுப்பேற்றினார் ருத்துராஜ். ‘நேத்து வந்த சின்னப்பையன் எவ்வளவு அழகா ஆடுறான்..உங்களுக்கு என்ன ஏட்டைய்யா…’ என மைதானத்திலிருந்த சி.எஸ்.கே ரசிகர்கள் முணுமுணுத்தனர்.

கேப்டன்சியில் ஸ்ரேயாஸ் கெட்டிக்காரர்தான். ஆனால், இன்னமும் கொஞ்சம் மெருகேற வேண்டும். ஏனெனில், ருத்துராஜ் கொடுத்த கேட்ச்சை அலேக்காக பிடித்த பஞ்சாப் பாய்ஸ் மாத்ரே கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். நியாயப்படி ருத்துராஜின் கேட்ச்சை ட்ராப் செய்து மாத்ரேவின் கேட்ச்சை பிடித்திருந்தால் ருத்துராஜே உருட்டி உருட்டி ஸ்கோரை ஏற விடாமல் பார்த்திருப்பார். ருத்துராஜ் 28 ரன்களில் சஹாலின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்தப் போட்டியில் ருத்துராஜ் இறங்கும் முன்பு தோனியை வைத்து காதுக்குள் ‘ஸ்பார்க் பத்தல…ஸ்பார்க் பத்தல…ஸ்பார்க் பத்தல…’ என 3 முறை கூறினால் ப்யூஸ் போன ருத்து ப்ரைட் ஆக வாய்ப்பு இருக்கிறது. நன்றாக ஆடிய மாத்ரே சதத்தை நோக்கி செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் மாத்ரே, ‘செஞ்சுரி அடிச்சா மட்டும் என்ன எனக்காடா க்ரெடிட் கொடுக்கப் போறீங்க. எல்லாத்தயும் பெரியவர் கணக்குலதான எழுதப் போறீங்க. உங்களுக்கு இது போதும்’ என்கிற மைண்ட் வாய்ஸோடு 73 ரன்களில் மாத்ரே விஜயகுமாரின் பந்தில் ஆட்டமிழந்தார். சிவம் துபே வந்த வேகத்தில் சிக்சர் அடிப்பார் என பார்த்தால் ‘பேட்டை அடிச்சு அடிச்சு தரையை பள்ளமாக்கிட்டான்’ பாணியில் கட்டையை போட்டார்.
எதிர்கொண்ட முதல் 14 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இடையில் சர்பராஸ் கான் ஒரு காட்டு காட்டினார். அர்ஷ்தீப் சிங்கின் ஒரே ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிக்களை தேர்டு மேனில் அடித்தார். அவர் அடித்த ஷாட்டுக்கெல்லாம் இன்னும் பெயரே வைக்கவில்லை. புரோட்டா அடித்து வீசும் மாஸ்டர்கள் பாணியில் இருந்ததால் நாமாகவே அதை ‘புரோட்டா ஷாட்’ என அழைத்துக் கொள்ளலாம். சர்பராஸ் 32 ரன்களில் விஜயகுமாரின் பந்தில் அவுட் ஆகினார். ‘சார் நீங்கதான் அசிஸ்டண்ட் கமிஷ்னர் ஆப் சிக்சர்ஸ்….சென்னை சிட்டி’ என யாரோ நினைவுப்படுத்தி விட சாமி பிஜிஎம் பின்னணியில் ஓட திடீரென வேகமெடுத்தார் துபே. கடைசி 2 ஓவர்களில் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு சென்னை அணியை 209 ரன்களை எடுக்க வைத்தார்.

ஹோம் க்ரவுண்டில் 200+ ஸ்கோர். ஆனாலுமே சென்னை அணியின் பௌலர்கள் மீது ஒரு நம்பிக்கையே வரவில்லை. எதிர்பார்த்ததை போல ப்ரியான்ஸ் ஆர்யாவும் பிரப்சிம்ரன் சிங்கும் வெளுத்தெடுத்தனர். முதல் 4 ஓவர்களில் மட்டும் 55 ரன்கள். சென்னை கூட்டம் மொத்தமும் அமைதியானது. DJ மட்டும் வாங்கிய காசுக்கு வாசித்துக் கொண்டிருந்தார். அவரும் ஒருகட்டத்தில் ‘எழுந்தரி சாரதி…எழுந்தரி…’ பாணியில், ‘நம்ம டீமுக்கு நாமதானே சப்போர்ட் பண்ணனும். கம் ஆன் பேன்ஸ்…’ என்றார். அடப்பாவி எப்படி இருந்த க்ரவுடுய்யா….இது என நிலைமையை பார்க்க அத்தனை பாவமாக இருந்தது. ஒரே ஆறுதல் பஞ்சாப் ஒரே அடியாக அடி வெளுக்கவில்லை. கொஞ்சம் தெளிய விட்டு தெளிய விட்டு அடித்தார்கள். பிரியான்ஷை மேட் ஹென்றி ஸ்டம்புகள் தெறிக்க வெளியேற்றினார். பிரப்சிம்ரன் ரன் அவுட் ஆகினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் பஞ்சாப்பின் ரன்ரேட் குறையவே இல்லை. பஞ்சாப் அடித்த அடியில் சென்னை வீரர்கள் கொஞ்சம் குழம்பிப் போயிருந்தனர்.
மேட் ஹென்றியெல்லாம் சாம்சனை நோக்கி ரிவியூவ் எடுக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார். ‘ஆஹா…பதவிக்கு ஆபத்து வருதே…’ என லாங் ஆனில் இருந்து ஓடி வந்தார் ருத்துராஜ். ஒட்டுமொத்த அணியுமே இட்லியும் குடல் குழம்பும் சாப்பிட்டுவிட்டு குறட்டை விடும் மனநிலையில் இருந்தது. இதற்கிடையில் கன்னோலி வந்து ஒரு காட்டு காட்டிவிட்டார். பின்னர், ஸ்ரேயாஸ் தன் பங்குக்கு இரக்கம் இல்லாமல் தாக்கினார். டைம் அவுட்டில் உள்ளே வந்த பயிற்சியாளர் ப்ளெம்மிங் ‘விடுங்க ப்ளே ஆப்ல பார்த்துக்கலாம்…’ என துவண்டு கிடந்த டீமை மோட்டிவேட் செய்து இன்னும் துவண்டு போக வைத்தார். ப்ளெம்மிங் பேசும் போது கம்போஜ் மட்டும் வாழைப்பழம் சாப்பிட போய்விட்டார். அதனால் தப்பித் தவறி ஸ்ரேயாஸின் விக்கெட்டை வீழ்த்திவிட்டார். ‘அப்போ ரிசல்ட் மாறிடுச்சா?’ அதுதான் இல்லை. எப்பவும் போல தோல்விதான்.

DJ மட்டும் ‘கண்டா வரச் சொல்லுங்க…’ ‘பொட்டு வச்ச தங்கக்குடம்’ என தோனிக்காக எடுத்த வைத்த ப்ளே லிஸ்ட்டை 30 செகண்ட் கட் சாங்ஸாக போட்டுக் காட்டி கூட்டத்தை கொஞ்சம் திருப்திப்படுத்தினார். DJ க்கு இருக்குற பொறுப்பு கூட இந்த டீமுக்கு இல்லையே என நொந்துபோன ரசிகர்கள், இதெல்லாம் மாத்தணும்னா ஒருத்தராலதான் முடியும் என சித்ரா அரவிந்தன் பாணியில் முடிவெடுத்து ‘Comeback Thala’ என ஹேஸ்டேக் போட போகிறார்களாம்!

எதுக்கு சார் இப்படி ஒரு முடிவு அவர் வந்தா எல்லாம் மாறிடுமான்னு வேகமாக வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலரை பிடித்துக் கேட்டோம். ‘அப்படியெல்லாம் ஒண்ணும் மாறாதுங்க. அவராச்சு மேட்ச் தோத்தாலும் 2 சிக்ஸ் அடிச்சோ இல்ல டைவ் அடிச்சு கேட்ச் பிடிச்சோ வேடிக்கை காட்டுவாரு. அதுல ஒரு எண்டெர்டெயின்மெண்ட் இருக்கும் அது போதும்’ என்றனர்.
வெளியூர் உள்ளூர் என எல்லா பக்கமும் அடி வாங்கிட்டு இப்படியெல்லாம் பேச சென்னை ரசிகர்களால் மட்டுமே முடியும்.
