இந்தியாவுக்கு கூடுதல் எண்ணெய்: ரஷ்ய துணை பிரதமர் உறுதி

புதுடில்லி: டில்லி வந்த ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ், ”நம் நாட்டுக்கு தேவையான கூடுதல் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என, உறுதி அளித்துள்ளார்.

மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் வினியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறையை ஈடுகட்ட ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு மீண்டும் கச்சா எண்ணெய் வாங்குகிறது.

இந்நிலையில், ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ், இரு நாள் பயணமாக நேற்று முன்தினம் டில்லி வந்தார். பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, “இந்தியாவுக்கு தேவையான அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி., வினியோகத்தை தொடர்ந்து அதிகரிப்போம். ”அதற்கான திறன் ரஷ்ய நிறுவனங்களுக்கு உள்ளது,” என, ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ் தெரிவித்தார்.

மேலும், இந்தியா – ரஷ்யா இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில் துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்த சந்திப்புகளில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உர வினியோக தேவையையும் தொடர்ந்து பூர்த்தி செய்ய தயார் என, ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link