புதுடில்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்., அரிதமன், நாட்டுக்கு முறைப்படி அர்ப்பணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடல் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆயுத தளவாடங்களை நம் கடற்படை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து வருகிறது.
அதன்படி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்., அரிஹந்த், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரகசியமாக 2016ல் நம் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இரண்டாவது கப்பலான ஐ.என்.எஸ்., அரிஹத், 2024ல் அர்ப்பணிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்., அரிதமன் கடற்படையில் நேற்று இணைக்கப் பட்டுள்ளது.
சுயசார்பு இந்தியா
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் சமூக ஊடக பக்கத்தில், ‘அரிதமன் வெறும் வார்த்தையல்ல; அது ஒரு சக்தி’ என நேற்று பதிவிட்டு இருந்தார்.
இதன் வாயிலாக, ஐ.என்.எஸ்., அரிதமன் கடற்படையில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் இந்த கப்பல், நம் கடற்படை சேவையில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் வாயிலாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலான அரிதமன், முந்தைய இரு கப்பல்களை விட பெரியது.
மொத்தம் 7,000 டன் எடை கொண்ட இந்த கப்பல், 3,500 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டது.
பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கிய மேம்படுத்தப்பட்ட 83 மெகாவாட் அழுத்தப்பட்ட நீர் உலை வாயிலாக அரிதமன் இயக்கப்படுகிறது. இது, நீர்மூழ்கி கப்பல் நீருக்கடியில் நீண்ட நேரம் இயங்குவதற்கு வழிவகை செய்கிறது.
இதனால், கடலுக்கடியில் நீண்ட நாள் ரகசியமாக பதுங்கியிருந்து, எதிரிகளின் தாக்குதலுக்கு பதிலடி தர முடியும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ள எட்டு செங்குத்து ஏவுகணை குழாய்கள், முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான அரிஹந்தை விட இரு மடங்கு திறன் கொண்டது. அதிநவீன வசதிகளை உடைய ஐ.என்.எஸ்., அரிதமன், நம் கடற்படையின் பாதுகாப்பு பணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
வடிவமைப்பு
‘அரிதமன் கப்பல் நம் படையில் இணைக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ்., தாராகிரி என்னும் அதி நவீன போர்க்கப்பலை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த கப்பல், எதிரி களின் ரேடாரில் சிக்காத வடிவமைப்பை கொண்டதுடன், ‘சூப்பர்சோனிக்’ ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடும் நவீன ஆயுதங்களையும் கொண்டுள்ளது.
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நெருக்கடி காலங் களிலும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளிலோ, மனிதாபிமான உதவி வழங்கும் சமயத்திலோ எந்த பணியிலும் நம் கடற்படை முன்னணி வகிக்கிறது. பதற்றமான சூழல் ஏற்படும்போதெல்லாம், நம் வர்த்தக கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்களின் பாதுகாப்பை கடற்படை உறுதி செய்துள்ளது.
இந்த திறன், நம் நாட்டை பொறுப்புள்ள ஒரு கடல்சார் சக்தியாக ஆக்குகிறது. ஐ.என்.எஸ்., தாராகிரி, எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தன் பாதுகாப்பை உறுதி செய்யவும், தேவைப்பட்டால் உடனடி பதிலடி கொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
