இத்தாலி தகுதி பெறாதது ஏன்… * உலக கோப்பை கால்பந்து தொடருக்கு

ரோம்: ஒரு காலத்தில் கால்பந்து பேரரசாக இருந்த இத்தாலி, இப்போது தடுமாறுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்து தவிக்கிறது.

உலக கோப்பை கால்பந்து அரங்கில் 4 முறை உலக சாம்பியன் இத்தாலி (1934, 1938, 1982, 2006). கடந்த இரு முறை (2014, 2018) தகுதிச்சுற்றுடன் வெளியேறியது. இம்முறையும் ஏமாற்றிய இத்தாலி அணி, கடைசி தகுதி வாய்ப்பில் 4-1 என போஸ்னியாவிடம் தோற்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக (2018, 2022, 2026) உலக கோப்பை கால்பந்தில் பங்கேற்க முடியாமல் போனது.

வீழ்ச்சி ஏன்

கடந்த 2006ல் கோப்பை வென்ற போது இருந்த டெல் பியரோ, டோட்டி, ஆன்ட்ரியா பிர்லா போன்ற சிறந்த வீரர்கள் தற்போதுள்ள அணியில் இல்லை. கோல் கீப்பர் கியான்லுய்கி மட்டும் உலகத் தரம் வாய்ந்தவராக உள்ளார். அர்ஜென்டினாவில் பிறந்த மத்தேயு, கியன் தான் முன்னணி வீரர்களாக உள்ளனர்.

‘ஓல்டு’ கிளப்

இத்தாலியில் நடக்கும் கிளப் கால்பந்து ‘சீரியே ஏ’, உலகின் முன்னணி தொடராக இருந்தது. 1980, 1990 களில் மாரடோனா உள்ளிட்ட ஜாம்பவான் வீரர்கள் இதில் விளையாடினர். தற்போது, லுகா மாட்ரிச் 40, வார்டி 39, என பல ‘முதியோர்கள்’ விளையாடும் தொடராகி மாறிவிட்டது. இளம் வீரர்கள் இல்லாமல், வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது.

டென்னிஸ் ஆர்வம்

உலகின் ‘நம்பர்-2’ வீரர், ஜானிக் சின்னர் எழுச்சிக்குப் பின், இத்தாலியில் டென்னிஸ் மீதான ஆர்வம் எகிறியது. தெருக்களில் சுற்றித்திரியும் சிறுவர்கள் சாதாரணமாக பந்துகளை ‘கிக்’ செய்து விளையாடியது மறைந்துவிட்டது. அதிகமாக டென்னிசை தேர்வு செய்கின்றனர். தவிர கிமி அன்டோனெல்லி 19, ‘பார்முலா-1’ பந்தயத்தில் சாதிப்பதும், சமீபத்தில் ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட்டில் முதன் முறையாக பங்கேற்றதும், இத்தாலியில் கால்பந்து ஆர்வத்தை குறைத்து விட்டது.

இத்தாலியில் யுவண்டசை தவிர, மற்ற கிளப் அணிகளிடம் சொந்த கால்பந்து மைதானம் இல்லை. உலகின் சிறந்த கிளப் அணிகளுடன் போட்டியிட தேவையான வருமானம் இல்லாததால், இத்தாலி கால்பந்து வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

Source link