'ஜன் விஸ்வாஸ்' சீர்திருத்த சட்டத்தால் 5 கோடி வழக்குகளுக்கு தீர்வு வரும்

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘ஜன் விஸ்வாஸ்’ சீர்திருத்த சட்டங்களின் வாயிலாக, சிறிய குற்றங்களுக்கான, கிட்டத்தட்ட 5 கோடி வழக்குகள் மறுஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என மத்திய வர்த்தக அமைச்சர் பீயூஷ் கோயல் கூறியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது: சிறிய தவறுகளுக்கு கடும் தண்டனை அளிக்கும் 79 சட்டங்களின் 1000க்கு மேற்பட்ட உட்பிரிவுகளில் ஒரே சட்டத்தால் மாற்றம் செய்யப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது வரலாறு காணாத சீர்த்திருத்த நிகழ்வு ஆகும். சமூகத்துக்கு பெரிய அளவு தீங்கு விளைவிக்காத சிறிய தவறுகளை செய்தவர்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கப்படும்.

பொதுச்சொத்து, மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்துவோருக்கு மட்டுமே கடுமையான தண்டனைகள் தொடரும். சிறு குற்றங்களுக்கான கிட்டத்தட்ட 5 கோடி வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றை உள்ளூர் நிலையிலேயே ரத்து செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்வர். எனினும், இறுதி முடிவு நீதிமன்றங்களின் வரம்புக்கு உட்பட்டது. இது, வரலாற்றில் இல்லாத பெரிய சீர்திருத்த நிகழ்வு.

புதிய சீர்திருத்தங்களால் சிறுதொழில் முனைவோர், கைத்தறி, கயிறு உற்பத்தி முதலிய பாரம்பரிய தொழில் துறையினர் பயனடைவர். மேலும், சட்ட ஆவண நடைமுறையை பின்பற்றாததால் வழக்கு, ஊழல் ஆகிய பிரச்னைகளுக்கு இட்டுச்செல்லும் போக்கு மேற்கு வங்கம், ஒடிஷா, கேரளம், தமிழகம் ஆகியவற்றில் உள்ளது. ஏற்கனவே 12 மாநிலங்களில் இதுபோன்ற சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘தொழில் செய்வது எளிதாகும்”

சி.ஐ.ஐ., தென்மண்டல தலைவர் ரவிச்சந்திரன் புருஷோத்தமன் கூறியதாவது: ஜன் விஸ்வாஸ் மசோதா, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு சீர்திருத்தமாகும். இது சிறிய தவறுகளை குற்றவியல் நடவடிக்கைகளாக கருதும் முறையிலிருந்து விலகி, நம்பிக்கை மற்றும் நடைமுறைகளை எளிதாக்கும் முறைக்கு இந்தியா மாறுவதை குறிக்கிறது.
உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் எம்.எஸ்.எம்.இ., துறைகளின் வளர்ச்சியில் வலுவாகத் திகழும் தென்னிந்தியாவுக்கு இது கட்டமைப்பு ரீதியிலான பலத்தை தருகிறது. தேவையற்ற அச்சத்தை குறைத்து, நிர்வாகச் சுமையைத் தளர்த்தி, தொழிலின் போட்டித்திறனில் அதிக கவனம் செலுத்த இந்த சீர்திருத்தம் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link