கர்நாடகா முதலிடம்: 'கேலோ இந்தியா' விளையாட்டில்

ராய்பூர்: ‘கேலோ இந்தியா’ பழங்குடியினர் விளையாட்டில் 23 தங்கம் கைப்பற்றிய கர்நாடகா முதலிடம் பிடித்தது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில், ‘கேலோ இந்தியா’ பழங்குடியினர் விளையாட்டு முதல் சீசன் நடந்தது. மொத்தம் 106 தங்கம் வழங்கப்பட்டது. கடைசி நாளில் நடந்த வில்வித்தை போட்டியில் ஜார்க்கண்ட் வீராங்கனை கோமலிகா பாரி, ‘ரிகர்வ்’ பிரிவில் தங்கத்தை கைப்பற்றினார். ஆண்கள் பிரிவில் ஒடிசா வீரர் அர்ஜுன் காரா, தங்கம் வென்றார்.

முடிவில், 23 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என, 38 பதக்கம் கைப்பற்றிய கர்நாடகா, முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கர்நாடகா நீச்சல் நட்சத்திரங்களான மணிகண்டா (8 தங்கம், ஒரு வெள்ளி), தோனீஷ் (5 தங்கம், ஒரு வெள்ளி), மேகாஞ்சலி (4 தங்கம், 2 வெண்கலம்) பதக்கங்களை அள்ளினர்.

இரண்டாவது இடத்தை ஒடிசா (21 தங்கம், 15 வெள்ளி, 21 வெண்கலம்) பிடித்தது. ஒடிசா நீச்சல் வீராங்கனை அஞ்சலி முண்டா, 5 தங்கம் வென்றார். அடுத்த இரு இடங்களை ஜார்க்கண்ட் (16 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம்), மகாராஷ்டிரா (6 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம்) கைப்பற்றின. போட்டியை நடத்திய சத்தீஸ்கர் (3 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம்) 9வது இடம் பிடித்தது.

Source link