காப்புரிமை பெற்ற மருந்து இறக்குமதி; 100 சதவீத வரி விதித்தது அமெரிக்கா

புதுடில்லி: காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு, அமெரிக்கா 100 சதவீதம் வரி விதித்துள்ளது.

அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வரி தொடர்பான அதிகாரப்பூர்வ பிரகடனத்தில், அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இதனால், இந்தியாவுக்கு உடனடியாக பெரிய பாதிப்பு இல்லையென்றாலும், நீண்ட கால அடிப்படையில் நாட்டின் ஏற்றுமதியை பாதிக்கக்கூடும் என, துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா தற்போது 53 சதவீத காப்புரிமை பெற்ற மருந்துகளையும், 85 சதவீத மூலப்பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளையே அதிகம் சார்ந்துள்ளது. இந்நிலையில், உலகளாவிய வினியோக தொடரில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காமல் அமெரிக்க மக்கள் பாதிக்கப்படுவர் என டிரம்ப் அரசு அஞ்சுகிறது.

எனவே, அதிகமான இறக்குமதி சார்பை குறைத்து, உயிர் காக்கும் மருந்துகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மருந்து நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் வகையில், தற்போது இந்த வரி விதிக்கப்படுவதாக கூறியுள்ளது. வரி விதிப்பு நடப்பாண்டு ஜூலை மற்றும் செப்டம்பரில் இரண்டு கட்டங்களாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

‘உடனடி பாதிப்பில்லை’
இந்திய மருந்து துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நம் நாட்டின் மருந்து ஏற்றுமதியின் முதுகெலும்பாக விளங்கும் ஜெனரிக் மருந்துகளுக்கு இந்த வரியிலிருந்து தற்போதைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க ஜெனரிக் மருந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய நிறுவனங்களுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் இருக்காது. எனினும், நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இந்த வரி விதிப்பு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். காப்புரிமை பெற்ற மருந்துகளை இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யவில்லையென்றாலும், இதை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை பெருமளவு வழங்கி வருகிறது.
வரி விதிப்பு காரணமாக, இந்த வினியோக தொடர் பாதிக்கப்படக்கூடும். வரி விதிப்பிலிருந்து தப்பிக்க, நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை அமெரிக்காவுக்கே மாற்றினால் இந்தியாவுக்கு வரும் அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த முதலீடுகள் குறைய வாய்ப்புள்ளன. இவ்வாறு தெரிவித்தனர்.

Source link