பைனலில் ஷீத்தல்-பயல் * பாரா வில்வித்தை தொடரில்…

பாங்காக்: பாரா வில்வித்தை தொடரின் பைனலில் இந்தியாவின் ஷீத்தல்-பயல் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

தாய்லாந்தில் மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் பாரா உலக வில்வித்தை சீரிஸ் நடக்கிறது. பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவில் போட்டி நடந்தன. இந்திய வீராங்கனைகள் ஷீத்தல் தேவி, பயல் நாக், ஜோதி, சரிதா நேரடியாக இரண்டாவது சுற்றில் களமிறங்கி, வெற்றி பெற்றனர். காலிறுதியில் ஷீத்தல் தேவி, 146-137 என தாய்லாந்தின் பானிபாவை வென்றார்.

பயல் நாக் 144-142 என சக வீராங்கனை சரிதாவை சாய்த்தார். மற்றொரு காலிறுதியில் ஜோதி 140-145 என நுார் அலிமிடம் தோல்வியடைந்தார்.

அடுத்து நடந்த அரையிறுதியில் ஷீத்தல் தேவி, 144-142 என நுார் அலிமை வென்றார். பயல் நாக், 144-140 என கஜகஸ்தானின் ஜனத்தை வீழ்த்தினார். நாளை நடக்கும் பைனலில் இரு கைகள் இல்லாத ஷீத்தல் தேவி, இரு கால், கைகள் இல்லாத உலகின் முதல் வில்வித்தை நட்சத்திரமான பயல் நாக்கை எதிர்கொள்கிறார்.

ஆண்களுக்கான ரிகர்வ் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், 6-0 என சக வீரர் சாஹிலை வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் ஹர்விந்தர் சிங், 6-0 என தென் கொரியாவின் கவாக்கை சாய்த்து, பைனலுக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான ரிகர்வ் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பாவ்னா, 6-0 என இந்தோனேஷியாவின் ரோசை வென்றார். அரையிறுதியில் பாவ்னா, 6-4 என சுலோவாகியாவின் லாவ்ரின்க்கை வென்று, பைனலுக்குள் நுழைந்தார்.

Source link