மும்பை: சட்டவிரோத, ‘பைக் டாக்சி’ சேவைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செயலி அடிப்படையில் இயங்கும் கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், நாடு தழுவிய அளவில் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றச்சாட்டு
நம் நாட்டில், ‘ஓலா, ஊபர், ராபிடோ’ போன்ற நிறுவனங்கள் செயலி அடிப்படையிலான கார், ஆட்டோ, பைக் டாக்சி சேவைகளை மக்களுக்கு அளித்து வருகின்றன.
இந்த சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள், வாகனங்களை இயக்கும் டிரைவர்களிடம் கமிஷன் என்ற பெயரில் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இதேபோல், பல மாநிலங்களில் இந்நிறுவனங்கள் சட்டவிரோதமாக பைக் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன.
இதனால் ஆட்டோ, டாக்சி டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மஹாராஷ்டிரா உட்பட நாடு தழுவிய அளவில், செயலி அடிப்படையில் இயங்கும் டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள், நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, மஹாராஷ்டிராவின் காம்ஹர் சபாவின் தலைவர் டாக்டர் கேசவ் சாக்ஷிர்சாஹர் கூறியதாவது:
பெரும்பாலான ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் டிரைவர்களிடம் கட்டண கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அவசர உதவிக்கான அழைப்பு பொத்தான் பொருத்தும்படி அரசு அறிவுறுத்தியது.
தீர்வு
இதையடுத்து, பலர் அப்பொத்தான்களை பொருத்திய நிலையில், அவற்றில் பல அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் என கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அவற்றை மீண்டும் மாற்றி பொருத்த, கூடுதல் செலவாக 12,000 ரூபாய் வரை டிரைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம் ஏன்?
தெலுங்கானா தொழிலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஓலா, ஊபர், ராபிடோ போன்ற செயலி அடிப்படையிலான நிறுவனங்களில் பணிபுரியும் கார், ஆட்டோ டிரைவர்களுக்கு, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண முறை இல்லாததால், அந்நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிக்கின்றன. இதனால், லட்சக்கணக்கான டிரைவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நிலையான வருவாய் இல்லாததால், இதுபோன்ற சுரண்டல்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளன. இதற்கான ஒழுங்குமுறை கட்டண விகிதங்களை அரசு நிர்ணயிக்க வேண்டும்’ என, குறிப்பிட்டுள்ளது.
