நமது சிறப்பு நிருபர்
தொழில் நகரம் கோவையில், வலுவான தொழிற்சங்க அமைப்புகள் உள்ளன. 74 ஆண்டுகளாக அவை ஒவ்வொரு தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கை கொடுத்தன. இப்போது, முதல் முறையாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கோவையில் ஒரு தொகுதியில் கூட போட்டியிடவில்லை. இது குறித்து மக்கள் நினைப்பது என்ன?
அதிருப்தி பாதிக்கும்
கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தான் தொழிலாளர்கள் பிரச்னையையும், பொதுமக்கள் பிரச்னைகளையும்சட்டசபையில் பேசுவார்கள். மற்ற கட்சிகள் பேச மாட்டார்கள். அதனால் தொழிலாளர்களின் அதிருப்தி இந்த தேர்தலில் வெளிப்படும். சீட் தராத தி.மு.க.வுக்கு இதனால் நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.
-எம்.கபிலன் புலியகுளம்
தி.மு.க.வுக்கு ஓட்டு விழாது
கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த கூட்டணியில் இருந்தாலும், கோவையில் கட்டாயம் சில தொகுதிகள் ஒதுக்கப்படுவது வழக்கம். இந்த தேர்தலில் ஒரு இடம் கூட ஒதுக்காதது தி.மு.க.வின் திட்டமிட்ட செயல் தான். கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதை முடிந்து விட்டதாக காட்ட நினைக்கிறது.இதனால் கம்யூனிஸ்ட் ஓட்டுகள் தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்காது.
-ஏ.செய்யது பஷீர் பொன்னையராஜபுரம்
விட்டு கொடுத்தது தப்பு
அண்ணாமலையால் பா.ஜ. செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்த சவாலை நேரடியாக எதிர்கொள்ள தி.மு.க. விரும்புகிறது.நேரடியாக மோதினால் தான் பா.ஜ.வை தடுக்க முடியும் என நினைத்திருக்கலாம். தி.மு.க.வின் வியூகம் சரியாக இருக்கலாம். இருந்தாலும், கம்யூனிஸ்டுகள் தமது அடையாளத்தை விட்டுக்கொடுத்ததை ஜீரணிக்க முடியவில்லை.
– கவிதா, ராமநாதபுரம்
காலம் பதில் சொல்லும்
இப்பல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியில முன்ன மாதிரி கம்பீரமான ஆளுமை இல்லை. எதையும் துணிச்சலா தட்டி கேட்குற அப்ரோச் இல்ல. அடக்கி வாசிக்கிறாங்க. மத்த கட்சிகள மாதிரி இங்கேயும் சுயநலம் வந்தாச்சுனு நினைக்கிறேன். பத்தோட பதினொண்ணா இருந்து என்ன பிரயோசனம்? காலம்தான் பதில்சொல்லணும்.
– மாணிக்கம், வைசியாள் வீதி
காலத்தின் கட்டாயம்
கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்க எந்த தலைவரும் முயற்சி செய்யவில்லை. தானாக வளரும் என நினைத்து கொண்டார்கள். பச்சோந்தி மாதிரி மாநிலத்துக்கு மாநிலம் கூட்டணியை மாற்றி கொண்டதால் மக்களிடம் நம்பிக்கை போய்விட்டது. தி.மு.க. தொகுதி தந்தாலும், போட்டியிட ஆள் இல்லாமல் வெளியூர்காரரை நிறுத்துவார்கள். இது காலத்தின் கட்டாயம்.
– மனோஜ், கவுண்டம்பாளையம்
உரிமைக்குரல் ஓயாது
ஏதாவது ஒரு தொகுதியில் தி.மு.க. வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.பஞ்சாலைகள், தொழிற்சாலைகள் குறைந்ததாலும் டெக்னாலஜி முன்னேற்றத்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தேவை இல்லை என தி.மு.க. கருதி இருக்கலாம். எது மாறினாலும் சுரண்டல் மறையாது. தொழிற்சங்கத்தின் தேவை குறையாது. கம்யூனிஸ்ட்களின் குரல் இனி ஓங்கி ஒலிக்கும்.
– துரைசாமி, மேட்டுப்பாளையம்
ஏமாற்றம் தருகிறது
ஆளும் கட்சியுடன் கரம் கோர்த்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள தவறிவிட்டன. ஒருவேளை அதுவே காரணமாகவும் இருக்கலாம். உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுப்பதுஅந்த இரு கட்சிகள்தான். தொழில் நகரான கோவையில் போட்டியிட முடியாத நிலை உருவானது ஏமாற்றம் அளிக்கிறது.
-லோகேஷ், சிங்காநல்லுார்
கணக்கு தவறிவிட்டது
பல உயிர்களை பலி கொடுத்து வளர்ந்தது கம்யூனிஸ்ட் பேரியக்கம். வீட்டுக்கு ஒரு கம்யூனிஸ்ட் இருந்தனர். அந்த வளர்ச்சியை கார்ப்பரேட் கம்பெனிகள் விரும்பவில்லை. அதை மீறி வளர்வதற்கான முன்னெடுப்பு கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் இல்லை. மக்களுக்காக குரல் கொடுத்த நிலை மாறி, கூட்டணிக்கு விசுவாசம் காட்டியதன் விளைவு இந்த வீழ்ச்சி.
– பாலு, தண்ணீர் பந்தல்
வேட்பாளர்தான் முக்கியம்
என்.டி.சி. மற்றும் நுாற்பாலைகளில் இருந்த வலிமையான தொழிற்சங்கங்களால் கோவையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்குடன் இருந்தன. இப்போது நிலைமை அப்படியில்லை. அரசியல் மாற்றங்களுக்கு ஏற்பகட்சிகள் மாறுவது இயல்புதான். கட்சியை விட வேட்பாளர் தகுதியானவராக இருந்தாலே போதும்.
– சந்தோஷ், மதுக்கரை
