தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்; தூங்கி வழிந்த தி.மு.க. வேட்பாளர்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இத்தகைய சூழலில் தான் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்,தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளின் கட்சி நிர்வாகிகளுடன் இணைய வழியில் காணொளி வாயிலாக நேற்று (03.04.2026) விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து  முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார். அதோடு ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் அரசியல் சூழல், தேர்தல் பிரச்சார வியூகங்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார். 

தேர்தல் பணிகளில் காணப்படும் ஒருங்கிணைப்புக் குறைபாடுகளைச் சரிசெய்து, பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசு செயல்படுத்தியுள்ள மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கட்சியின் தொண்டர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் பகுதி, நகரம், ஒன்றிய அளவிலான செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

அந்த வகையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், திமுக சார்பில் பரமத்தி வேலூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான மூர்த்தி  இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசும்போது தூங்கித் தூங்கி வழிந்துள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்த நிர்வாகிகள் அவரை தூங்க வேண்டாம் எனக் கூறியபோதும், அவர் தூங்கி வழிந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதே சமயம் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளரே சுறுசுறுப்பின்றி இருப்பது கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாகக் கூறுகின்றனர்.

Source link