மிலன்: குளிர்கால ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்து பனிச்சறுக்கு வீரர் பிராஞ்சோ வான் ஆல்மென், முதல் தங்கம் வென்றார்.
இத்தாலியின் மிலன், கார்டினா நகரங்களில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடக்கிறது. இதில் 92 நாடுகளை சேர்ந்த, 2850க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் ஆரிப் கான் (ஆல்பைன் பனிச்சறுக்கு, ‘ஸ்லாலோம்’), ஸ்டான்சின் லுண்டப் (‘கிராஸ்-கன்ட்ரி’ பனிச்சறுக்கு, 10 கி.மீ., ‘பிரீஸ்டைல்’) என, இரண்டு பேர் பங்கேற்கின்றனர்.
மிலன் நகரில் உள்ள சான் சிரோ மைதானத்தில் கண்கவர் துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை ஆரிப் கான் ஏந்தி வந்தார்.
ஆண்களுக்கான ‘ஆல்பைன்’ பனிச்சறுக்கு, ‘டவுன்ஹில்’ போட்டியில் இலக்கை ஒரு நிமிடம், 51.61 வினாடியில் கடந்த சுவிட்சர்லாந்தின் பிராஞ்சோ வான் ஆல்மென் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இது, இம்முறை வழங்கப்பட்ட முதல் தங்கம். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே இத்தாலியின் ஜியோவானி பிரான்சோனி (1:51.81), டொமினிக் பாரிஸ் (1:52.11) கைப்பற்றினர்.
