காரைக்குடி: தேர்தல் நேரத்தில் பார்லி கூட்டத்தொடர் ஏன்? தேர்தல்கள் முடிந்த பிறகு, ஏப்ரல் 29ம் தேதி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
காரைக்குடியில் நிருபர்களிடம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: பார்லிமென்ட்டில் இரு அவைகளிலும் ஏப்ரல் மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு கூட்டம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பார்லிமென்ட் எம்பிக்களின் எண்ணிக்கையை 543லிருந்து 816 ஆக (50% உயர்வு) அதிகரிப்பது மற்றும் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமான 67 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் பணிகளால் அவைக்கு வர முடியாத சூழலை உருவாக்கி, மசோதாக்களை நிறைவேற்ற அரசு முயல்வதாகக் கூறப்படுகிறது. தேர்தல்கள் முடிந்த பிறகு, ஏப்ரல் 29ம் தேதி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பார்லி கூட்டத்தொடர் ஏன்?
ஏப்ரல் 23, 29ம் ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கூட்டத்தைக் கூட்டுவது அரசியல் சதி. தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பால் தென் மாநிலங்களின் குரல் பார்லிமென்டில் மேலும் குறையும் என்ற அச்சம் உள்ளது. இந்த அவசர நடவடிக்கையை ஒரு அரசியல் சாசன மோசடி என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
