வரலாறு காணாத எரிபொருள் விலை உயர்வு; மக்களின் எதிர்ப்பால் முடிவை மாற்றிய பாகிஸ்தான்

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், உலக சந்தையில் எண்ணெயின் தேவை அதிகரித்து, விலையும் கடுமையான அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, உலக பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், உலகின் பல்வேறு நாடுகள், எரிபொருள் தட்டுப்பாட்டால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. 

அந்த வகையில், பிலிப்பைன்ஸ் அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. அதே போல, மலேசியாவும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதியளித்தது. இலங்கையில், எரிபொருள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை கடுமையான விலையுயர்வைச் சந்தித்துள்ளன. அதோடு, எரிபொருள் பெறுவதற்கும் மக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதே போல வங்க தேசத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், வருங்காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ? என்ற அச்சம் மக்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதன் காரணமாக, அந்நாட்டு அரசு ஏற்கனவே கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவிற்கு எரிபொருள் விலையேற்றம் கண்டுள்ளது. இது பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதாவது, ஒரே நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அதனால்,  மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஒரு லிட்டருக்கு பாகிஸ்தான் ரூபாய்.80 (ஐஎன்ஆர் 26.63) குறைப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால், நுகர்வோருக்கு பாகிஸ்தான் ரூபாயில் 378 என்ற வீதத்தில் பெட்ரோல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குறைந்தது ஒரு மாதத்திற்கு, இந்த திருத்தத்தப்பட்ட விலையில் பெட்ரோல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் ஹை ஸ்பீட் டீசல் முறையே 43 மற்றும் 55 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டது. இதில், பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட போதிலும் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சமீபத்திய விலையேற்றத்தினால் (பிகேஆர்) ரூ.458 நிலையில் இருந்த பெட்ரோல் விலை தற்போது (பிகேஆர்) ரூ.378 என்ற அளவிற்குக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Source link