ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? – உறுதியளித்த மோடி

புதுச்சேரியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு சென்னை வந்த பிரதமர் மோடி, ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.

அப்போது, தமிழக பா.ஜ.க-வின் சீனியர் தலைவர் ஹெச்.ராஜாவையும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதியையும் வரவழைத்துப் பேசியிருக்கிறார் மோடி.

ஹெச்.ராஜா

அந்தச் சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர், “பா.ஜ.க-வின் சீனியர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா, சில வாரங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு, உடல்நலம் பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார் ஹெச்.ராஜா.

காரைக்குடி தொகுதியில் அவர் போட்டியிட விரும்பிய நிலையில், உடல்நிலை காரணமாக தேர்தல் களத்தில் இறங்கவில்லை. இந்தச்சூழலில்தான், சென்னை வந்த பிரதமர் மோடி, ஹெச்.ராஜாவை நேரில் வரச் சொன்னார்.

ஹெச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்த பிரதமர், ”இந்தக் கட்சிக்காக உங்களுடைய உழைப்பு அளப்பரியது. அதற்குரிய மரியாதையை நான் செய்ய வேண்டுமென விரும்புகிறேன். இந்தத் தேர்தல் முடிந்தவுடன், உங்களுக்கு ஆளுநர் பதவியளிக்க தீர்மானித்திருக்கிறோம்.

நாட்டுக்கான உங்களுடைய பணி தொடர வேண்டும்” என்று வாழ்த்தியிருக்கிறார். பிரதமரிடமிருந்து இப்படியொரு ஸ்வீட்டான செய்தி வருமென ஹெச்.ராஜாவும் எதிர்பார்க்கவில்லை.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அவரோடு சமகாலத்தில் பயணித்த இல.கணேசன், தமிழிசை செளந்திரராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஆளுநர் பதவியை அலங்கரித்துவிட்டனர். ஆனால், ஹெச்.ராஜாவுக்குத்தான் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமலேயே இருந்தது. உடல்நிலை காரணமாக, இனி தீவிர அரசியலில் ஈடுபட முடியுமா என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது. இந்தச்சூழலில், ஆளுநர் பதவி கிடைக்குமென பிரதமர் உறுதியளிக்கவும், ராஜாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

தற்போது பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களாக இருக்கும் நான்கு பேரில், மொடக்குறிச்சி சரஸ்வதிக்கு மட்டும் சீட் கிடைக்கவில்லை. அதே தொகுதியில் அவருடைய மருமகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால், பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார் சரஸ்வதி” என்றனர்.

Source link