தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ள படம் ‘டிஎன் 2026’. கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி உள்ளிட்ட இன்னும் பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படம் அரசியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது படத்தில் நட்டியின் கதாபாத்திரம் தவெக தலைவர் விஜய்யை பிரதிபலிப்பது போலவே இருந்தது. மேலும “சினிமாகார பயலே, இது தமிழ்நாடு, வாழ ஆசைப்படு தப்பில்ல, ஆனா ஆள் நினைக்கிறியே அது தப்பில்ல’, ‘கூத்தாட வந்தவனையெல்லாம் தலை மேல தூக்கி வச்சி கொண்டாடுறீங்க’, ‘எம்.ஜி.ஆர் எல்லாம் எப்படி சிஎம் ஆனார்? எங்கள் தலைவரும் அதே மாஸுல தான இருக்காரு’ போன்ற அதிரடி வசனங்களும் இடம் பெற்றிருந்தது.
இதனை தவெக தொண்டர்கள் கண்டித்து படக்குழுவினரை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகக் கூடாது என்றால், எங்கள் தலைவரை அசிங்கப்படுத்தும் இந்தப் படம் மட்டும் எப்படி ரிலீஸ் ஆகுது? பா.ஜ.க – தி.மு.க கூட்டணியாக சேர்ந்து கொண்டு செயல்படுகிறார்கள். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படி ஒரு படத்தை எடுத்து தேர்தல் நேரத்தில் எப்படி ரிலீஸ் செய்ய முடிகிறது?” பொங்கினார்.
இந்த நிலையில் தம்பி ராமையா ஆதவ் அர்ஜூனாவுக்கு பதிலளித்துள்ளார். படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும், உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். அந்த பொறுப்புடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. தவெக வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா, ஒரு மேடையில் அவரது வாழ்க்கையைப் பற்றி கண்கலங்கி பேசியதைப் பார்த்து நானே நெகிழ்ந்து போய்விட்டேன். உங்களுடைய பெரியம்மாவான திலகவதி அம்மா, எனக்கும் அம்மாவைப் போன்றவர்தான். விஜய்யுடன் மூன்று படம் நடித்துவிட்டேன். என்னுடைய வயதுக்கு நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்த படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை. தம்பி ஆதவ் அர்ஜுனா அதைப் புரிந்துகொள்ள வேண்டும். யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாக புரிந்துகொள்வீர்கள்” என்றுள்ளார்.
