தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ள படம் ‘டிஎன் 2026’. கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி உள்ளிட்ட இன்னும் பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படம் அரசியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது படத்தில் நட்டியின் கதாபாத்திரம் தவெக தலைவர் விஜய்யை பிரதிபலிப்பது போலவே இருந்தது. மேலும “சினிமாகார பயலே, இது தமிழ்நாடு, வாழ ஆசைப்படு தப்பில்ல, ஆனா ஆள் நினைக்கிறியே அது தப்பில்ல’, ‘கூத்தாட வந்தவனையெல்லாம் தலை மேல தூக்கி வச்சி கொண்டாடுறீங்க’, ‘எம்.ஜி.ஆர் எல்லாம் எப்படி சிஎம் ஆனார்? எங்கள் தலைவரும் அதே மாஸுல தான இருக்காரு’ போன்ற அதிரடி வசனங்களும் இடம் பெற்றிருந்தது.
இதனை தவெக தொண்டர்கள் கண்டித்து படக்குழுவினரை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகக் கூடாது என்றால், எங்கள் தலைவரை அசிங்கப்படுத்தும் இந்தப் படம் மட்டும் எப்படி ரிலீஸ் ஆகுது? பா.ஜ.க – தி.மு.க கூட்டணியாக சேர்ந்து கொண்டு செயல்படுகிறார்கள். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படி ஒரு படத்தை எடுத்து தேர்தல் நேரத்தில் எப்படி ரிலீஸ் செய்ய முடிகிறது?” பொங்கினார்.
இந்த நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் உமாபதி ராமையா, “தயாரிப்பாளர் கண்ணன் ரவி, எங்களுக்கு முழு சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். இசையமைப்பாளர் தர்புகா சிவா, எடிட்டர், ஃபைட் மாஸ்டர், கோரியோகிராஃபர்கள் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் அனைவரின் பங்களிப்பும் சிறப்பானது. அவர்களின் ஒத்துழைப்பால்தான் இந்த படம் சிறப்பாக உருவாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் டீம் மற்றும் சிஜி டீமிற்கும் என் நன்றி. இரவு படல் என உழைத்து இந்த படத்தை முழுமையாக்கி வருகிறார்கள்.
இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எம்.எஸ். பாஸ்கர் சார், இளவரசு சார் போன்ற பெரிய கலைஞர்கள் ஒரு புதிய முயற்சிக்காக எங்களை ஆதரித்தது மிகப் பெரிய விஷயம். அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் முழு உற்சாகத்துடன் நடித்தார்கள். நட்டி சார் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான நடிப்பை காட்டியுள்ளார். பல கெட்டப்புகளில் அவர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும்.
இந்த படத்தில் யாரையும் குறிவைத்து எதுவும் செய்யப்படவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அரசியல் படம் மட்டுமே. சினிமாவாக பார்த்தால் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். எல்லோரும் வந்து சிரித்து மகிழும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. அதனால் அரசியல் கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
