தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கட்சித் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் விஜய் சமர்ப்பித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் சமர்ப்பித்த வேட்புமனுவில் குளறுபடி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது பெரம்பூர் தொகுதிக்காக சமர்பித்த வேட்புமனுவில், தன் மீது எந்த வழக்கும் இல்லை என்று குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கில் சமர்ப்பித்த வேட்பு மனுவில், 2025ல் நடந்த மதுரை மாநாட்டின் போது பாதுகாவலர்கள் தள்ளியதில் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில் வழக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பெரம்பூர் வேட்பு மனு தாக்கலில் அவரது வயது 52 என்றும், திருச்சி கிழக்கில் அவருடைய வயது 51 என்றும் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் சமர்ப்பித்துள்ள வேட்பு மனுக்களில் இவ்வாறு முரண்பட்ட தகவல்கள் இருப்பது, அவரின் வேட்புமனுவை நிராகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளரின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை மறைப்பது அல்லது தவறான தகவல்களை அளிப்பது தண்டனைக்குரிய செயல் மட்டுமின்றி, அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று (04-04-26) கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் விஜய்யின் வேட்புமனு நிராகரிப்பில் இருந்து தப்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
