சென்னை: ‘ஆட்டோ மற்றும் கால் டாக்சிகளில் பயணிக்க வசதியாக, தமிழகத்திலும், ‘பாரத் டாக்ஸி செயலி’ விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’ என, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நகரமயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில், ஆட்டோ மற்றும் கால் டாக்சிகளில் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தனியார் செயலிகளில், ஆட்டோ மற்றும் கால் டாக்சிகளுக்கு நிரந்தர கட்டணம் இல்லை. பயணி யர் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில், கட்டணம் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
எனவே, நாடு முழுதும் ஒரே செயலியில் பதிவு செய்து, குறைந்த கட்டணத்தில், பயணியர் பயணிக்க வசதியாக, ‘பாரத் டாக்ஸி’ செயலி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது, குஜராத் மற்றும் டில்லியில் மட்டுமே துவக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாநிலங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், ‘தனியார் செயலியை ஒப்பிடுகையில், ‘பாரத் டாக்ஸி’ செயலியில், கட்டணம் குறைவாக இருக்கிறது.
‘பொதுமக்களுக்கு மட்டுமின்றி, ஓட்டுநர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மற்ற மாநிலங்களில், மத்திய அரசு விரிவாக்கம் செய்யும் போது, தமிழகத்திலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
இது குறித்து, அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜாஹீர் ஹுசைன் கூறுகையில், ”தனியார் செயலிகள், ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்களிடம் இருந்து 30 சதவீதம் தொகை கமிஷனாக பெறுகின்றன.
”ஓட்டுநர் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில், செயலியை அமல்படுத்தி உள்ள மத்திய அரசுக்கு நன்றி. சென்னை போன்ற நகரங்களில் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
