சென்னை: தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு இல்லை எனக்கூறுவது அப்பட்டமான பொய். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துகள் பொறுப்பற்றவை, எந்த சூழ்நிலையிலும் ஹிந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மும்மொழிக் கல்விக் கொள்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். (இந்த செய்தியை படிக்க இங்கு கிளிக் செய்யவும்)
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தோல்விகளை மறைக்க ஹிந்தி திணிப்பு எனக்கூறுவதாக கூறியிருந்தார்.(இந்த செய்தியை படிக்க இங்கு கிளிக் செய்யவும்)
அலட்சியம்
இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துகள் பொறுப்பற்றவை. அவை , இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி விழுமியங்கள் மற்றும் மாநிலங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் மீதான அலட்சியத்தை பிரதிபலிக்கிறன்றன. தமிழகம் மும்மொழிக் கொள்கையை நிராகரிக்கிறது. இது மொழிகளை எதிர்ப்பது பற்றியது அல்ல. மாறாக திணிப்பை எதிர்ப்பது மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாப்பது பற்றியது.
ஹிந்தி திணிக்கப்படவில்லை என்ற கூற்று வெளிப்படையாக நேர்மையற்றது. தமிழகம் போன்ற ஹிந்தி பேசாத மாநிலங்களை வேறு வழியின்றி மூன்றாவது மொழியை ஏற்றுக் கொள்ளுமாறு கொள்கை ரீதியாக நிர்பந்திக்கப்படும் போதும், கல்வி நிதி இத்துடன் பிணைக்கப்படும் போதும், அது விருப்பத்தின் அடிப்படையிலான விஷயமாக இருப்பது இல்லை.
மானியம் அல்ல
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடி நிதியை சட்டவிரோதமாக நிறுத்திவைப்பது துணிச்சலின் உச்சகட்டமாகும். இது ஹிந்தி திணிப்பை ஏற்க மறுத்ததற்காக தமிழகத்தை பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாகவே அமைகிறது. இவை தன்னிச்சையாக வழங்கப்படும் மானியங்கள் அல்ல. மாறாக வரிகள் வாயிலாக திரட்டப்பட்டு, தமிழக மக்களுக்கு சட்டப்பூர்வமாகவே உரித்தான நிதியாகும். இத்தகைய நிதியை மிரட்டி பணிய வைக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தவே முடியாது.
நிதி அழுத்தம் அல்லது தேசிய நலன் என்று கூறப்பட்டாலும் எந்தச் சூழ்நிலையிலும் மொழித்திணிப்பை தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. இந்தக் கொள்கையைானது மாணவர்கள் மீதுதேவையற்ற சுமையை சுமத்துகிறது. மாநிலங்களின் உரிமைகளை மீறுகிறது. மேலும் இந்தியாவின் மொழிப்பன்மையை நீர்த்து போகச் செய்கிறது.
எத்தனை பள்ளிகளில்
உபி, மபி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் உண்மையில் எந்த மூன்றாவது மொழி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் உள்ள எத்தனை பிஎம்ஸ்ரீ பள்ளிகளில் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற தென்மாநில மொழிகளையும், வங்காளம், ஒடியா மற்றும் மராத்தி போன்ற மொழிகளையும் உண்மையாக கற்பிக்கப்படுகின்றன.
கேந்திரியா வித்யாலயா சங்கதன் அமைப்பின் கீழ் இயங்கும் எத்தனை பள்ளிகள் உண்மையில் தமிழ்மொழி கற்பிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தமிழ் மற்றும் பிற தென் மாநில மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சவால்
சமஸ்கிருத மொழியின் மேம்பாட்டிற்காக செலவிட்ட தொகையோடு ஒப்பிடுகையில், தமிழ் கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா போன்ற செம்மொழிகளின் மேம்பாட்டிற்காக தேஜ அரசு எவ்வளவு தொகையை செலவு செய்துள்ளது என்பதை வெளியிட வேண்டும் என உங்களுக்கு சவால் விடுகிறேன்.
தமிழகத்தில் பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற உங்களின் குற்றச்சாட்டும் ஆதாரமற்றது. பல பத்தாண்டுகால தொடர்ச்சியான முதலீடு மற்றும் அதிக மாணவர் சேர்க்கை, சிறந்த கற்றல் மற்றும் முன்னோடியான நலத்திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் மிக வலிமையான பொதுக்கல்வி முறைகளில் ஒன்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம்
பயம் அல்ல
ஹிந்தி திணிப்பிற்கு எதிராக எங்கள் எதிர்ப்பு அச்சத்தின் காரணமாக பிறந்தது அல்ல. நமது தாய்மொழியான தமிழ் ஒரு போதும் பலவீனம் அடையாது. தமிழும், தமிழர்களும் எல்லா விதமான திணிப்புகளையும் அல்லது பண்பாட்டு ஊடுருவல்களையும் தாங்கி நின்றிருக்கிறார்கள் இனியும் எதிர்த்து நிற்பார்கள். இத கொள்கை, கண்ணியம் மற்றும் இந்தியாவின் உண்மையான பன்முகத்தன்மையை பாதுகாப்பது தொடர்பான ஒரு விஷயம்.
தமிழகத்தில் மொழிக் கொள்கை உலகரங்கில் ஒரு வெற்றிக்கதையாக திகழ்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழர்கள் தடம் பதித்துள்ளனர். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையும் இந்த மாதிரியில் ஆழமாக வேரூன்றி உள்ளன. எங்களின் அனைத்துக் கூற்றுகளையும் அனுபவப்பூர்வமான தரவுகளின் மூலம் எங்களால் நிரூபிக்க முடியும். உங்கள் வாதங்கள் வெறும் வார்த்தைகளே தவிர கல்வித்துறையில் எந்தவொரு உண்மையான தரவுகளும் இல்லை.
நவீன கல்வியில் தமிழகத்தின் பள்ளிகளின் பின்தங்கிஉள்ளன எனக்கூறுவது தவறானது. மற்றும் புறக்கணிக்கக்கூடியது. மாணவர் சேர்க்கை, கற்றல் விளைவுகள் மற்றும் புதுமைகளில் தமிழகம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசு உள்கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதுடன், 20லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையும் முதல்வரின் இலவச காலை உணவுத்திட்டம் போன்ற முன்னோடித் திட்டங்களையும அறிமுகப்படுத்தி உள்ளது.
கேள்வி
பொதுக்கல்வி என்பது எங்களின் முதுன்மையான முன்னுரிமையாகும். அது ஒரு செலவினமாகக் கருதாமல், நீண்ட கால சமூகப் பலன்களை உருவாக்கும் ஒரு சமூக முதலீடாக கருதப்படுகிறது.
தமிழக மக்களின் ஓட்டுகளை கோரும் அதேநேரத்தில் ஒவ்வொரு இந்தியக் குழந்தையும் கட்டாயமாக மூன்று மொழிகளை கற்க வேண்டும் என்ற இந்த பிரகடனத்தை தமிழக மண்ணில் வெளியிட வேண்டும் என சவால் விடுகிறேன்.
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் மற்றும் தேஜ கூட்டணி கட்சியினர் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக கூற வேண்டும். பாஜவால் தீவிரமாக முன்னெடுக்கப்படும் இந்த மும்மொழிக் கொள்கையை அவர்கள் ஆதரிக்கிறார்களா. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
