“நடந்தால் ஸ்ரீதேவி நடக்கவில்லை என்றால் மூதேவி”

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் புவனகிரி தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ துரை.கி. சரவணன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை கூட்டணி கட்சியினருக்கு அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி சேத்தியாதோப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வேட்பாளர் சரவணனை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர், “புவனகிரி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதேபோல் தமிழக முதல்வரின் சாதனைகளை அனைத்து மக்கள் மத்தியிலும் வீடு வீடாக எடுத்துச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும். நடந்தால் தான் ஸ்ரீதேவி,  நடக்கவில்லையென்றால் மூதேவி எனவே அனைவரும் அனைத்து வீடுகளுக்கும்  நடந்து சென்று மக்களை  சந்தித்தால் வெற்றி நிச்சயம்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் சபாநாயகம், பாலு, மதியழகன், வெற்றிவேல், ராயர், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சித்தார்த்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ். ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றிய செயலாளர்கள் செல்லையா, காளிகோவிந்தராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்கத் தமிழ் ஒளி, தேமுதிக மாவட்டச் செயலாளர் உமாநாத், மண்டல செயலாளர் செல்லப்பன், மாநில நிர்வாகி அறவாழி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் வி.எம். சேகர், மதிமுக மாவட்டச் செயலாளர் குணசேகரன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பூ.சி. இளங்கோவன், உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

இதில் கம்மபுரம், கங்கைகொண்டான், திருமுட்டம், புவனகிரி, சேத்தியாதோப்பு, கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அனைத்து கட்சிகளை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Source link