காட்பாடி : பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், 11வது முறையாக அமைச்சர் துரைமுருகன் போட்டியிடுகிறார். தன் மகன் கதிர் ஆனந்துடன் இணைந்து பிரச்சாரமும் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன், பொன்னை அடுத்த ஒட்டனேரி, விநாயகர் கோவிலில், துரைமுருகன், கதிர் ஆனந்த், தங்கள் கட்சியினருடன் தரிசனம் செய்தனர்.
அப்போது, அர்ச்சகர், துரைமுருகனுக்கு விபூதி மற்றும் குங்குமத்தை வைத்து விட்டார். முதலில் அதை தடுத்த துரைமுருகன், அடுத்த சில வினாடிகளில், தன் கைக்குட்டையால் குங்குமத்தை அழித்தார். இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹிந்து அமைப்பினர் கூறுகையில், ‘கோவிலுக்கு செல்லும் அமைச்சர், குங்குமத்தை கண்டால் ஒதுங்குவது ஏன்? குங்குமம் வைத்த உடனே அதை அழிக்கிறார். தொடர்ந்து, தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஹிந்து கோவில்கள் மற்றும் ஹிந்து சின்னங்களை இழிவுபடுத்துகின்றனர். தமிழகத்தின் மூத்த அமைச்சரே இவ்வாறு நடந்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. ஓட்டுக்காக மட்டுமே கோவிலுக்கு சென்று நாடகமாடுகின்றனர்’ என்றனர்.
