சென்னை: வேட்பாளர்களின் விபரங்களை, பொதுமக்கள் அனைவரும், ‘ஆன்லைன்’ வாயிலாக தெரிந்து கொள்வதற்கு, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை: உலகில் மிகப்பெரிய தேர்தல் சேவை தளமாக, ECINET உள்ளது. இது தேர்தல் கமிஷனின், 40க்கும் அதிகமான மொபைல்போன் செயலிகள் மற்றும் இணையதளங்களை ஒருங்கிணைக்கிறது. வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியல் தேடல், விண்ணப்பங்களை கண்காணித்தல், தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுதல், ஓட்டுச்சாவடி அலுவலர்களுடனான சந்திப்பை முன்பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகள், இதன் வாயிலாக வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு தொகுதி வேட்பாளர்களின் குற்றவியல் வழக்குகள், சொத்துக்கள் மற்றும் கடன்கள், கல்வித் தகுதிகள், வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் குறித்த தகவல்களை, ECINET சேவை தளத்தில் பார்க்கலாம். இதனுள் நுழைந்து உங்கள் வேட்பாளரை தெரிந்து கொள்ளுங்கள் பகுதியை பயன்படுத்தி, விபரங்களை அறியலாம். வேட்பாளர் சமர்ப்பித்த முழுமையான உறுதிமொழி பத்திரங்களையும், பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
