நமது நிருபர்
தன் மீது ஒரு வழக்கு கூட இல்லாத விஜய், வலிகளை தாங்கிக் கொண்டு அரசியலுக்கு வந்ததாக கூறுகிறார் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.
தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திருச்சியில் அவர் பிரசாரம் செய்தார்.
பின், சீமான் அளித்த பேட்டி:தமிழகத்திற்கு, பத்தரை லட்சம் கோடி கடன் இருப்பதாக மத்திய அமைச்சர் பீயூஸ் கோயல் கூறுகிறார். இது அவருக்கு இன்று தான் தெரியுமா? இந்தியாவுக்கு 196 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. பா.ஜ., ஆளும் அனைத்து மாநிலங்களிலும் கடன் இருக்கத்தானே செய்கிறது. இந்தியாவின் கடன் மட்டுமின்றி, தனித்தனியாக மாநில நிர்வாகங்களின் கடன் 400 லட்சம் கோடி ரூபாய் இருக்கும். அப்படி இருக்கும்போது, தமிழகத்துக்கு கடன் இருப்பது பற்றி கேள்வி கேட்க, பியூஸ் கோயலுக்கு என்ன தகுதி இருக்கிறது?
தமிழகத்தில் லஞ்சம், ஊழல் நிறைந்திருப்பதாக பா.ஜ.,வால் எப்படி சொல்ல முடிகிறது? அதிமுக ஊழல் கட்சி என்று சொல்லியதோடு, அதன் தலைவியை சிறையிலடைத்த பாஜ இப்போது அதே அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
தன் மீது ஒரு வழக்கு கூட இல்லாத தவெக தலைவர் விஜய், வலிகளை தாங்கி கொண்டு அரசியலுக்கு வந்ததாக கூறுகிறார். எந்த வலியை தாங்கினார் என்பதை அவர் விவரமாக சொல்ல வேண்டும். என் மீது, 261 வழக்கு என் மீது போடப்பட்டுள்ளன. நான் ஏறாத நீதிமன்ற படிக்கட்டுகள் இல்லை; நான் அடைக்கப்படாத சிறை இல்லை.நாட்டுக்கும் மக்களுக்குமான வலியில், எந்த வலியை தாங்கினார் விஜய்? அவர் நடித்த படம் வெளியாகவில்லை என்பது, அவரது தனிப்பட்ட வலி.
என் மக்கள் பிரச்னை, எனக்கான பிரச்னை என்று நினைத்தால் தான், ஒரு தலைவனாக மக்களுக்கு சேவையாற்ற முடியும். மக்களுக்கான வலியை சுமந்து, அதற்கு தீர்வு காண வருபவன்தான் தலைவன்.நான்கரை லட்சம் ஓட்டு வாங்கிய என்னை, 36 லட்சம் ஓட்டு வாங்க வைத்து, தனித்து அங்கீகாரம் பெற்ற கட்சியாக உயர்த்தி இருப்பது, மக்களிடம் ஏற்பட்ட மாற்றம் தானே. இவ்வாறு சீமான் கூறினார்.
