– நமது நிருபர் –
தமிழக போலீஸ் மற்றும் ரயில்வே போலீஸ் என, 39 மாவட்டங்கள், நான்கு மண்டலங்கள், 11 சரகம், 9 ஆணையரகம், 270 உட்கோட்டங்களில் மொத்தம், 1,922 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு போலீசார் முதல், டி.ஜி.பி., வரை, 1.33 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, அடிதடி, மோதல் போன்ற குற்றங்கள் நிகழ்ந்தால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அல்லது தகவல் கொடுப்பர்.
இதற்காக, 1990ல், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், ‘லேண்ட் லைன் போன் இணைப்பு’ வழங்கப்பட்டிருந்தது. கடந்த, 2018 – 19ல், பி.எஸ்.என்.எல்., இணைய வசதியுடன் கூடிய, ‘பைபர்’ சேவை வழங்கப்பட்டது. உயர் அதிகாரி முதல் போலீசார் மற்றும் ஸ்டேஷன்களுக்கு, சி.யூ.ஜி.,யுடன் கூடிய மொபைல் எண்கள் வழங்கப்பட்டன. இதனால், லேண்ட் லைன் இணைப்பு பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டன. இந்த சேவை நிறுத்தப்பட்டதால், மக்களால் தகவல், புகார் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சில இடங்களில் ஸ்டேஷன்களில் மட்டுமே, லேண்ட் லைன் பயன்பாட்டில் உள்ளது. அவ்வாறு இருந்தாலும், அந்த தொலைபேசியில், ‘ரிங்’ சவுண்ட் வராதது, தரைவழி இணைப்பில் உள்ள பிரச்னையால் தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவானது. ‘பைபர்’ இணைப்பில், இணைய வசதியுடன் லேண்ட் லைன் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த எண்ணை, இணைய வசதிக்கு மட்டுமே போலீசார் மாற்றியுள்ளனர்.
சி.யூ.ஜி., போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால், பல நேரங்களில், ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது; சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது’ என, தகவல் வருகிறது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டால், ‘டவர் இல்லை’ எனவும், ‘மொபைல் போன் சார்ஜரில் இருந்ததால் பேச முடியவில்லை’ என்றும் கூறுகின்றனர். புகார், தகவல் தெரிவிக்கும் வகையில், இணைய வசதியுடன் உள்ள லேண்ட் லைன் போன்களை, மீண்டும் போலீஸ் ஸ்டேஷன்களில் பயன்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
