டெஹ்ரான்: தன் வான்வெளியில் பறந்த இரண்டு அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஈரான், அதில் தப்பிய விமானியை பிடித்துக் கொடுத்தால் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பிப்., 28ல் போரை தொடுத்தன. போரை நிறுத்த ஒரு பக்கம் முயற்சி நடந்தாலும், 36வது நாளாக நேற்றும் இரு தரப்பும் தாக்கி கொண்டன.
தெற்கு ஈரானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் எப் -15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த விமானத்தின் மதிப்பு 289 கோடி ரூபாயாகும்.
இதையடுத்து, அமெரிக்க சிறப்பு படைகள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளில் ஒருவரை மீட்டுள்ளது; மற்றொருவர் காணாமல் போயுள்ளார். மீட்பு முயற்சியின்போது இரண்டு போர் ஹெலிகாப்டர்களும் ஈரானிய தாக்குதலுக்கு உள்ளாகின.
அவை சிறு சேதத்துடன் தப்பிய நிலையில், ஹெலிகாப்டரில் இருந்தவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், அனைவரும் பாதுகாப்பாக திரும்பியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
174 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்காவின், ‘ ஏ – 10 வார்த்ஹாக்’ என்ற தாக்குதல் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தீப்பற்றிய அந்த விமானம் குவைத் வான்வெளிக்குள் சென்று விழுந்ததாகக் கூறப்படுகிறது. விமானி, பாராசூட் மூலம் தப்பி பின்னர் மீட்கப்பட்டார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல்படை இந்த சம்பவத்தை பெரும் வெற்றியாகக் கொண்டாடுகிறது. அமெரிக்க பைலட்டை உயிருடன் பிடித்து ஒப்படைப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஈரான் உடனான போரில், ஒரு அமெரிக்க விமானம் நேரடியாக சுட்டு வீழ்த்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வரும் போரில், 16 அமெரிக்க போர் விமானங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் சில நட்பு நாடுகளாலேயே தவறுதலாக சுடப்பட்டுள்ளன. மேலும் சில விமானங்களை, தரையில் நிறுத்தியிருந்தபோது ஈரான் தாக்கியுள்ளது.
தற்போது முதல்முறையாக வானிலேயே, போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
