அசாம் மாநில சட்டசபை தேர்தலை தீர்மானிக்கும்  தொகுதி மறுவரையறை!: அதிரடி வியூகங்களை வகுக்கும் அரசியல் கட்சிகள்

– நமது சிறப்பு நிருபர் -:

அசாமில் நடக்கும் சட்டசபை தேர்தலை இந்த முறை தொகுதி மறுவரையறை தான் முழுக்க முழுக்க தீர்மானிக்கப் போகிறது. இதனால், ஆளும் பா.ஜ., – எதிர்க்கட்சியான காங்., பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்துள்ளன. வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 126 சட்டசபை தொகுதிகளுக்கு வரும், 9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

தொடர்ச்சியாக இரு முறை வெற்றி பெற்ற பா.ஜ., மூன்றாவது வெற்றியை எதிர்பார்த்துள்ளது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருந்து பா.ஜ.,வை விரட்டி அடிக்க வேண்டும் என்ற முனைப்பில், எதிர்க் கட்சியான காங்கிரசும் பணியாற்றி வருகிறது.

மாற்றம்

சட்டசபை தேர்தல் நடக்கும் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்த நிலையில், அசாமில் மட்டும், தனித்துவமான குடியுரிமை விதிகள் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சரிபார்ப்பு காரணமாக, வாக்காளர் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் பணிகள் நடந்தன.

இந்நிலையில், அசாமில் நடக்கும் சட்டசபை தேர்தலை இந்த முறை தொகுதி மறுவரையறை தான் முழுக்க முழுக்க தீர்மானிக்கப் போகிறது.

மறுவரையறைக்கு பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், அரசியல் கட்சிகள் அதிரடி வியூகங்களை வகுத்துள்ளன. மற்ற காரணிகளை விட, தொகுதி மறுவரையறையே அசாமின், 126 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கப் போகிறது.

மக்கள் தொகை மாற்றங்கள் மற்றும் நிர்வாக அலகுகளுக்கு ஏற்ப, சட்ட சபை மற்றும் பார்லி., தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைப்பதே தொகுதி மறுவரையறை எனப்படுகிறது. அசாமில், 1976-க்கு பின், 50 ஆண்டுகள் கழித்து, 2023ல் தான் தேர்தல் கமிஷன் இந்த பணி யை முடித்தது.

ஜம்மு- – காஷ்மீரில் நடந்த தொகுதி மறுவரையறையில், ஏழு இடங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆனால், அசாமில் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. 126 என்ற எண்ணிக் கையிலேயே உள்ளன.

எனினும், தொகுதி களின் எல்லைகள், பெயர்கள், இட ஒதுக்கீடு அந்தஸ்து ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தொகுதி மறு வரையறை, ‘உடைத்தல், ஒன்றிணைத்தல், குவித்தல்’ ஆகிய மூன்று அம்சங்களை உள்ளடக்கி இருப்பதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 


உடைத்தல்: முஸ்லிம் வாக்காளர்களை பிரித்து, ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளுடன் இணைப்பது. இதன் மூலம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பது முறியடிக்கப் படுகிறது.

ஒன்றிணைத்தல்: முஸ்லிம் ஆதிக்கம் உள்ள பல பகுதிகளை ஒரே தொகுதியில் அடைப்பது. இதன் மூலம் அவர்கள் வெற்றி பெறக் கூடிய மொத்த தொகுதி களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.


குவித்தல்: ஹிந்து மக்கள் தொகை குறைவாக உள்ள இடங்களை ஒன்றாக இணைத்து, அங்கு அவர்களுக்கு பெரும்பான்மை பலத்தை உருவாக்குவது.

தொகுதி மறுவரையறைக்கு முன், 35 தொகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை, 20 ஆக குறைந்துள்ளது.

இதனால், தெற்கு சல்மாரா, பார்பெட்டா, நகான் உள்ளிட்ட, 10 முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகள் தங்கள் செல்வாக்கை இழந்துள்ளன. அதே நேரத்தில், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு தொகுதிகள், 16-லிருந்து 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

தொகுதி மாற்றங்களால், லோக்சபா எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், மாநில காங்., தலைவருமான கவுரவ் கோகோய் இந்த முறை தன் குடும்பத்தின் கோட்டையான திதாபர் தொகுதியில் போட்டியிடவில்லை.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில், ஜோர்ஹாட் தொகுதியில் வென்ற அவர், தற்போது ஜோர்ஹாட் சட்டசபை தொகுதியில் பா.ஜ., மூத்த தலைவர் ஹிதேந்திர நாத் கோஸ்வாமியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

அசாமின், 1.1 கோடி முஸ்லிம் மக்களின் அரசியல் செல்வாக்கை இந்த மறுவரையறை குறைக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ‘பா.ஜ.,வுக்கு முஸ்லிம் ஓட்டுகள் தேவையில்லை’ எனக் கூறி, இந்த தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை.

ஆதரவு

பா.ஜ.,வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தோன்றினாலும், பெங்காலி மொழி பேசும் ஹிந்துக்களின் ஆதரவு முழுமையாக இருக்குமா என்பது சந்தேகமே.

தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலில் இருந்து, 10 லட்சம் ஹிந்துக்கள் விடுபட்டுள்ளது மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் போன்றவை, இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மு ஸ்லிம் ஓட்டுகளை பெரிதும் நம்பியிருக்கும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, காங்., உள்ளிட்ட கட்சிகள், இந்த தொகுதி மறுவரையறைக்கு பின் சட்டசபையில் எத்தனை இடங்களை பெறப் போகின்றன என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த சந்தேகங்களுக்கு எல்லாம், மே 4ல் ஓட்டு எண்ணிக்கை அன்று விடை தெரிந்து விடும்.

Source link