வெலிங்டன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து பெண்கள் அணி, தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
நியூசிலாந்து சென்ற தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி வெலிங்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு சுசீ பேட்ஸ் (0), ஜார்ஜியா பிளிம்மர் (1), கேப்டன் அமேலியா கெர் (0) ஏமாற்றினர். பின் இணைந்த மேடி கிரீன், புரூக் ஹாலிடே ஜோடி கைகொடுத்தது. அபாரமாக ஆடிய கிரீன் சதம் விளாசினார். ஹாலிடே அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 211 ரன் சேர்த்த போது ஹாலிடே (98) அவுட்டானார்.
நியூசிலாந்து அணி 50 ஓவரில், 306/7 ரன் எடுத்தது. கிரீன் (141), நென்சி படேல் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் லாரா (69), அன்னெரி டெர்க்சன் (47) நம்பிக்கை தந்தனர். தஸ்னிம் பிரிட்ஸ் (25), சுனே லுாஸ் (21), டிரையான் (29) நிலைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 46.1 ஓவரில் 240 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’டாகி தோல்வியடைந்தது.
