வலுவை கூட்டும் ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல்

‘ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல் லிமிடெட்’ இரும்பு மற்றும் உருக்கு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, ஆண்டுக்கு 357 லட்சம் டன் ‘கச்சா ஸ்டீல்’ உற்பத்தித் திறனுடன், இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாக இது உள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்நிறுவனத்துக்கு ஆலைகள் உள்ளன.

சர்வதேச அளவிலும் இந்நிறுவனம் தங்களது செயல்பாட்டை கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் டெக்சாஸில் ஆண்டுக்கு, 12 லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட ‘பிளேட்ஸ்’ ஆலை, 5 லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட குழாய் ஆலைகள், ஓஹியோவில் 30 லட்சம் டன் திறன் கொண்ட ‘ஹாட் ரோலிங்’ மில் ஆலைகள், 15 லட்சம் டன் திறன் கொண்ட ‘எலெக்ட்ரிக் ஆர்க் உலைகள்’ ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

மேலும், இத்தாலியின் பியோம்பினோவில் ஆண்டுக்கு 13 லட்சம் டன் திறன் கொண்ட சிறப்பு வகை ‘லாங் ஸ்டீல்’ உற்பத்தி ஆலையையும் இந்நிறுவனம் இயக்கி வருகிறது.

தயாரிப்புகள் நிறுவனத்தின் மொத்த விற்பனையில், ‘ஹாட் ரோல்டு காயில்’கள் மற்றும் ‘பிளேட்டு’கள் 58 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளன. இதனை தொடர்ந்து கட்டுமானத்திற்கு பயன்படும் லாங்க் ஸ்டீல் தயாரிப்புகள் 18 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

மீதமு ள்ள விற்பனையில் ‘கால்வனைஸ்டு ஸ்டீல்’ பொருள்கள் 15 சதவீதமும், கோல்ட் ரோல்டு சுருள்கள் 9 சதவீதமும் பங்களிக்கின்றன.

பங்களிப்பு நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சில்லரை வர்த்தகம் 37 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது. கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறை 34 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. அதேபோல், தொழிற்துறை சார்ந்த விற்பனை 16 சதவீதமாகவும், ஆட்டோமொபைல் துறை சார்ந்த விற்பனை 13 சதவீதமாகவும் உள்ளது.

அடிப்படை ஆதாரங்கள் 1. மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள்: வெறும் ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாக மட்டும் அல்லாமல், அதிக லாபம் தரும் மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் சிறப்புத் தயாரிப்புகளையும் உற்பத்தி செய்கிறது. தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 62 சதவீத பங்களிப்பை, மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் வழங்குகின்றன. இந்த மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளில் ஆட்டோமொபைல், கோட்டிங் செய்யப்பட்ட ஸ்டீல் மற்றும் டின்பிளேட் ஸ்டீல் ஆகியவை அடங்கும்.

2. மூலப்பொருள் தேவையைப் பூர்த்தி செய்தல்: ஸ்டீலை தயாரிப்பதற்கு இரும்பு தாது மற்றும் கோக்கிங் நிலக்கரி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

நிறுவனம் கிட்டத்தட்ட 162 கோடி டன் கையிருப்பு கொண்ட 23 இரும்புத் தாது சுரங்கங்களை இயக்கி வருகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த தேவையில் 30 சதவீதம் பூர்த்தி செய்யப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இது 40 சதவீதம் வரை உயரக்கூடும். நீண்ட கால நோக்கில், மூலப்பொருள் தேவையில் 50 சதவீதத்தை சொந்தச் சுரங்கங்கள் மூலமே பெற நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது வெளி ச்சந்தை விலையேற்றத்திலிருந்து நிறுவனத்தைப் பாதுகாக்கும்.

இந்தியா, கோக்கிங் நிலக்கரிக்கு இறக்குமதியையே பெரிதும் சார்ந்துள்ள நிலையில், நிறுவனம் தனது விநியோக ஆதாரங்களை ஒருமுகப்படுத்தி வருகிறது.

ஜார்க்கண்டில் ஆண்டுக்கு 22 லட்சம் டன் திறன் கொண்ட உள்நாட்டு நிலக்கரிச் சுரங்கங்களை கைப்பற்றியுள்ளது.

சர்வதேச அளவில், ஆஸ்திரேலியாவின் ‘இல்லவாரா மெட்டலர்ஜிகல் கோல்’ நிறுவனத்தில் தனது பங்குகளை 30 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

மேலும், மொசாம்பிக்கின் ரெவுபோ திட்டத்தின் மூலம் உயர்தர நிலக்கரி வினியோகத்தை உறுதி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது. 2031ம் நிதியாண்டிற்குள் தனது கோக்கிங் நிலக்கரித் தேவையில் 25 சதவீதத்தைச் சொந்தச் சுரங்கங்கள் மூலம் பூர்த்தி செய்ய நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

நிறுவனம், 2031 நிதியாண்டுக்குள் ஆண்டுக்கு சுமார் 56 மில்லியன் டன் கச்சா ஸ்டீல் உற்பத்தித் திறனை எட்டுவதற்கான முறையான விரிவாக்க திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இதில் பி.பி.எஸ்.எல்., தவிர்த்த இந்திய செயல்பாடுகளின் மூலம் மட்டும் 50 மில்லியன் டன் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் அமையவுள்ள 5 மில்லியன் டன் திறன் கொண்ட ஒருங்கிணைந்த ஸ்டீல் ஆலை, நிறுவனத்தின் மிக முக்கியமான திட்டமாகும்.

எதிர்காலத்தில் இத்திட்டத்தை 13.2 மில்லியன் டன் வரை விரிவாக்கம் செய்யும் வசதி ஆரம்பத்திலேயே திட்டமிடப்பட்டுள்ளதால், வருங்கால மூலதனச் செலவு கணிசமாகக் குறையும்.

விஜயநகரில் உள்ள 5 மில்லியன் டன் திறன் கொண்ட ஜே.வி.எம்.எல்., ஆலை தற்போது முழு உற்பத்தித் திறனை எட்டியுள்ளது. மேலும், அங்குள்ள மூன்றாவது ஊது உலையை மேம்படுத்தும் பணிகள் செப்டம்பர் 2025 இறுதியில் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் 2026 நிதியாண்டின் 4-வது காலாண்டிற்குள் கூடுதலாக 1.50 மில்லியன் டன் உற்பத்தித் திறன் சேர்க்கப்படும். இது 2027 நிதியாண்டு முதல் கூடுதல் உற்பத்தியைப் பெற வழிவகுக்கும்.

‘டொல்வி’ ஆலைத் திட்டத்தின் உற்பத்தித் திறனை 100 லட்சம் டன்னிலிருந்து 150 லட்சம் டன்னாக உயர்த்துவதற்கான விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 21,000 கோடி ரூபாய் முதலீட்டில் நடைபெறும் இப்பணிகள், செப்டம்பர் 2027-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, ஆந்திராவின் கடப்பாவில் சுமார் 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படவுள்ள 10 லட்சம் டன் திறன் கொண்ட மின்சார வில் உலை ஆலை, 2029ம் நிதியாண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும். இது நிறுவனத்தின் நீண்ட ஸ்டீல் தயாரிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகளையும் வழங்கும்.

நிறுவனம் அடுத்த 4-5 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் ஒடிசா மற்றும் டொல்வி ஆலை விரிவாக்கம், மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள், சுரங்கம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகள் அடங்கும். 2025 – 2026ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ஏற்கனவே 10,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம். வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

Source link