புதுடில்லி: “ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமான ஆராய்ச்சி குழு உருவாக்குதல், பிரத்யேக ட்ரோன் பரிசோதனை

புதுடில்லி: “ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமான ஆராய்ச்சி குழு உருவாக்குதல், பிரத்யேக ட்ரோன் பரிசோதனை மையம் அமைத்தல், ட்ரோன் பயன்பாட்டை அதிகரித்தல், ட்ரோன் பயன்பாட்டுக்கான மானியம் வழங்குதல் ஆகியவை, டில்லி அரசின் ட்ரோன் கொள்கையில் இடம்பெறும்,” என, டில்லி தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் கூறினார்.

இதுகுறித்து, டில்லி தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் கூறியதாவது:

சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், டில்லி அரசின் ட்ரோன் கொள்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் சூழலில், அரசுசாரா அமைப்பான, ‘இந்திய ட்ரோன் கூட்டமைப்புடன் இணைந்து, டில்லியில் ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

டில்லி அரசின் ட்ரோன் கொள்கை சாத்தியக்கூறுகளை ஆராய, தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் தலைமையில் குழு இந்த ஆண்டு துவக்கத்தில் அமைக்கப்பட்டது.

பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட ட்ரோன் செயல்பாடுகளை உறுதி செய்ய விரிவான ட்ரோன் கொள்கை திட்டமிடப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப டாஷ்போர்டு எனப்படும் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பை உருவாக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தவறான பயன்பாட்டை தடுக்க ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், கண்காணிப்பு மற்றும் அரசு நிறுவனங்கள் ட்ரோன்களைப் பயன்படுத்த உதவுதல் ஆகியவை இந்தக் கொள்கையில் இடம்பெறும்.

டில்லி அரசின் ட்ரோன் கொள்கை, பொது விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம் உள்ளிட்ட ஐந்து முக்கியப் பகுதிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. போலீஸ் துறை, பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஆகியவற்றின் பணிகளில் ட்ரோன்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும்.

அதேபோல, ரியல் எஸ்டேட் திட்டங்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டைத் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, ட்ரோன் பயன்பாட்டுக்கு மானியம் மற்றும் மாநில ஜி.எஸ்.டி., திருப்பிச் செலுத்துதல் ஆகியவை குறித்தும் பரிசீலனை நடக்கிறது. டில்லி அரசின் ட்ரோன் கொள்கை இறுதி செய்யப்பட்டு, விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link