சண்டிகர்: பஞ்சாபில், அரசு அதிகாரி தற்கொலை செய்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை அறிவிக்க கோரி, பா.ஜ.,வினர் அமிர்தசரஸில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பஞ்சாப் மாநில உணவுப் பொருள் கிடங்கு மாவட்ட மேலாளராக பணியாற்றியவர் ககன்தீப் சிங் ரந்தவா. கடந்த மாதம் 21ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அமைச்சர் ராஜினாமா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் தற்கொலை செய்து கொள்வதாகவும், ககன்தீப் சிங், வீடியோ ஒன்றை தற்கொலைக்கு முன் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து, லால்ஜித் சிங் புல்லர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், லால்ஜித் சிங்கை கைது செய்தனர்.
இந்நிலையில், அமிர்தசரஸ் ஹால் கேட் அருகே பா.ஜ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாநில பா.ஜ., தலைவர் சுனில் ஜாக்கர், செயல் தலைவர் அஷ்வனி சர்மா, தேசிய பொதுச்செயலர் தருண் சுக், மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். ககன் தீப் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக் கோரி கோஷமிட்டனர்.
அப்போது, அஷ்வனி சர்மா கூறியதாவது:
ககன் தீப் சிங் ரந்தவா குடும்பத்துக்கு பா.ஜ., துணையாக நிற்கும். ககன்தீப் சிங் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை பா.ஜ.,வின் போராட்டம் தொடரும்.
அவநம்பிக்கை ரந்தவா குடும்பத்தினருக்கு பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் மீதோ அல்லது பஞ்சாப் போலீஸ் மீதோ நம்பிக்கை இல்லை. அதனால்தான், ககன்தீப் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை கோருகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பஞ்சாப் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வர் பகவந்த் மான், புல்லரை காப்பாற்ற ஏன் முயற்சிக்கிறார்? ரந்தவா தற்கொலை குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் வரை, ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் புல்லருக்கு சிறையில், ‘வி.ஐ.பி.,’ வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.
புல்லரின் தந்தை மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
செயலற்ற அரசால் பஞ்சாப் மாநிலம் சீர்குலைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
