சென்னை:ஈரானில் சிக்கி தவித்த தமிழக மீனவர்கள் 327 பேர் உட்பட, 345 மீனவர்கள்சிறப்பு விமானத்தில் சென்னை வந்தனர்.

சென்னை:ஈரானில் சிக்கி தவித்த தமிழக மீனவர்கள் 327 பேர் உட்பட, 345 மீனவர்கள்சிறப்பு விமானத்தில் சென்னை வந்தனர்.

மேற்காசிய நாடான ஈரானில் தங்கி, இந்திய மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த பிப்., 28ம் தேதி, ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் மூண்டதால், இந்திய மீனவர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை தாயகம் அழைத்து வர, மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களை அழைத்து வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக 345 இந்திய மீனவர்கள், ஈரானிலிருந்து அர்மீனியா நாட்டிற்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து சிறப்பு விமானத்தில், நேற்று டில்லி வழியாக இரவு சென்னை அழைத்து வரப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் வரவேற்றார். தனி விமானத்தில் வந்த 345 மீனவர்களில், 327 பேர் தமிழகம்; 10 பேர் கேரளா; ஐந்து பேர் புதுச்சேரி; இரண்டு பேர் குஜராத்; ஒருவர் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும், அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

ஈரானில் சந்தித்த அனுபவங்கள் குறித்து மீனவர்கள் கூறியதாவது:

திடீரென போர் மூண்டதால், எதிர்பாராத பல விஷயங்கள் நடந்தன. மின்சாரம் தடைபட்டது. மொபைல் சிக்னல் கிடைக்காததால், பயத்தில் தவித்தோம். சாப்பிடுவதற்கு வழியில்லாத நிலை ஏற்பட்டது. காலையில் ‘கப்சா’ என்ற ரொட்டி வகை உணவை தந்தனர். மதியம் உணவு கிடையாது. இரவும் அதே கப்சாவை தான் சாப்பிட்டோம்.

இரவு முழுதும் காதை பிளக்கும் அளவிற்கு வெடிகுண்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அறையில் இருந்து அனைவரும் அலறினோம். மின்சாரம் இல்லை. யாராவது நம்மை மீட்க மாட்டார்களா என ஏக்கத்துடன் காத்திருந்தோம்.

ஒரு நாள் இரவு குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, பயங்கர சத்தத்துடன் குண்டு விழுந்தது. அறை முழுதும் கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் நொறுங்கின. ஒரு வழியாக மத்திய அரசு எங்களை மீட்டு வந்தது. உதவிய அதிகாரிகளுக்கு நன்றி.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

பா.ஜ., செலவில் மீனவர்கள் மீட்பு
ஈரான் நாட்டில், தமிழக மீனவர்கள் உட்பட 345 பேர் உணவு இல்லாமல் சிக்கி தவித்தனர். இந்த விபரம், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அனைவரும் பா.ஜ., ஏற்பாட்டில் தனி விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். ஒரு நபருக்கு 93,000 ரூபாய் செலவானது. தமிழக மீனவர்களை பா.ஜ., தன் சொந்த செலவில் மீட்டு வந்துள்ளது.
– நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்

Source link