ஜவுளி சப்ளைக்கு 45 நாளில் பணம் ஆணையாளரிடம் வலியுறுத்தல்

திருப்பூர்: ”ஜி.எஸ்.டி., பதிவுதாரர் அனைவருக்கும், 45 நாட்களில் ‘பேமென்ட்’ செய்யும் உத்தரவை அமல்படுத்த வேண்டும்” என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தின், ஜவுளி கண்காட்சி மும்பையில் கடந்த 2, 3 ம் தேதிகளில் நடந்தது. கண்காட்சி கருத்தரங்கின்போது, திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் சண்முகசுந்தரம், பொதுசெயலாளர் தாமோதரன், இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சந்தோஷ் கட்டாரியா உள்ளிட்டோர், மத்திய ஜவுளித்துறை கமிஷனர் விருந்தா மனோகர் தேசாயை சந்தித்து பின்னலாடை தொழில் சந்தித்து வரும் புதிய சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விளக்கினர்.

ஆடை உற்பத்தியில் பெறப்பட்ட சேவை பணிகளுக்கான கட்டணத்தை, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்; ஆனால், வர்த்தகர்களிடம் வலியுறுத்த முடியவில்லை.

நடுத்தர நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வருவதில்லை; ஆனால், கொடுக்க வேண்டிய சேவை கட்டணத்தை, 45 நாட்களில் கொடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளதாக கூறினர்.

மே மாதம் சந்திப்பு
‘சைமா’ நிர்வாகிகள் கூறுகையில், ”தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று, வரும் மே மாதம், திருப்பூர் தொழில் அமைப்பினரை சந்தித்து ஆலோசிக்க வருவதாக, கமிஷனர் உறுதி அளித்துள்ளார். நாடு முழுதும் உள்ள பின்னலாடை உள்ளிட்ட ஜவுளி அமைப்புகள், இக்கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது,” என்றனர்.

Source link