கேரள சி.எஸ்.ஐ., பிஷப் பரிந்துரையில், விளவங்கோடு தொகுதி காங்., வேட்பாளராக பிரவீன் அறிவிக்கப்பட்டது, அத்தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில், காங்.,கிற்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில், விளவங்கோடு வேட்பாளராக பிரவீன் என்பவர் அறிவிக்கப்பட்டார். அத்தொகுதியில் போட்டியிட, சிட்டிங் எம்.எல்.ஏ., தாரகை கத்பட், தமிழக காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமார் உட்பட 60 பேர் விருப்ப மனு அளித்தனர்.
குளச்சல் தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ., பிரின்சுக்கு பதிலாக, எம்.எல்.ஏ., தாரகை கத்பட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன், சி.எஸ்.ஐ., தென்னிந்திய கேரளா டயோசீஸ் நிர்வாகியாக உள்ளார்.
கட்சிக்கு தொடர்பில்லாதவரை வேட்பாளராக நிறுத்தியது, காங்., கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்., அலுவலகத்தில் தலைவர்களின் படம் இடம்பெற்ற துணி பேனருக்கு, செருப்பு மாலைகள் அணிவித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
‘கன்னியாகுமரி மாவட்ட காங்கிரசை, கேரளாவுக்கு விற்ற துரோகிகளுக்கு, செருப்பு மாலையுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்’ என, சமூக வலைதளங்களில் காங்கிரசார் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, விளவங்கோடு காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கேரளாவிலும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. சி.எஸ்.ஐ., கிறிஸ்துவர்கள், கிறிஸ்துவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர், தேர்தலில் போட்டியிடுகின்றனர். அங்குள்ள அனைத்து கிறிஸ்துவர்களின் ஓட்டுகளும், முழுமையாக காங்.,கிற்கு கிடைக்க வேண்டும் என்றால், தங்கள் அமைப்பைச் சேர்ந்த பிரவீனுக்கு சீட் தர வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் ஆகியோரிடம் சி.எஸ்.ஐ., பிஷப்புகள் சிலர் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, விளவங்கோடு தொகுதி காங்., – எம்.எல்.ஏ., விஜயதாரணி பதவி விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில், தாரகை கத்பட்டிற்கு சீட் வழங்கப்பட்டது. அவருக்கு கத்தோலிக்க பிஷப் பரிந்துரை செய்தார். விளவங்கோடு தொகுதியை பொறுத்தவரை, பிஷப்புகளின் கண் அசைவில், வேட்பாளர் தேர்வு செய்யப்படுகிறார். இது, நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
