அ .தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் திரு.வி.க., நகர் வேட்பாளர் பொற்கொடிக்கு, வி.சி.க.,வினர் ஆதரவு தெரிவிப்பதால், தி.மு.க., வேட்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை திரு.வி.க., நகர் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு, வி.சி.க., தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார். திரைப்பட இயக்குநர் ரஞ்சித், வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதேபோல், த.வெ.க.,வை சேர்ந்த வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவும், தனிப்பட்ட முறையில் பொற்கொடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங், 2024ல் கொலை செய்யப்பட்ட நிலையில், பொற்கொடி தனது கணவர் கொலைக்கு நீதி கோரி நிற்பதாக பிரச்சாரம் செய்து, அனுதாபம் தேடி வருகிறார்.
அதேநேரம், தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., இடம் பெற்றிருந்தாலும், பொற்கொடிக்கு வி.சி.க.,வினர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மற்றும் கானா பாடகர்கள் வாயிலாக, வி.சி.க., ஓட்டுகளை பொற்கொடிக்கு பெற்றுத்தர முயற்சிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இருப்பதால், வன்னியர் சமூக ஓட்டுகளும், கணிசமாக பொற்கொடிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
இது, தி.மு.க., தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
